Published : 09 Jun 2023 04:26 PM
Last Updated : 09 Jun 2023 04:26 PM
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் இருந்து தருமபுரி செல்லும் மேம்பாலத்தில் எரியாத நிலையில் உள்ள மின் சோடிய விளக்குகளை சரி செய்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தின் வழியாக தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்ட எல்லையில் போதிய மின் விளக்கு வெளிச்சம் எந்த பகுதியிலும் இல்லாததால் வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் எவ்வழியாக தங்கள் பகுதிக்கு செல்வது என தெரியாமல் குழம்புகின்றனர். குறிப்பாக, திருப்பத்தூர் - தருமபுரி செல்லும் சாலையில் போதிய மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின் றனர்.
இது குறித்து செவ் வாத்தூர் அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.மூர்த்தி என்பவர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘புதிதாக பிரிக்கப் பட்ட திருப்பத்தூர் மாவட்டம் பல்வேறு வளர்ச்சிகளை எதிர் பார்த்து காத்திருக்கிறது. சாலை வசதி, மின் விளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல இடங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது.
போதிய வெளிச்சம் இல்லை: திருப்பத்தூரில் இருந்து தருமபுரிக்கு செல்வோர் ஆதியூர் மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும். இந்த மேம்பாலம் அபாயகரமான வளைவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் 23 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் மட்டுமே மின் விளக்குள் எரிந்தன.
அதன்பிறகு போதிய பராமரிப்பு இல்லாததால் அனைத்து மின் விளக்குகளும் பழுதடைந்துள்ளன. தற்போது ஒரு மின் விளக்கு கூட எரியவில்லை. இதனால், இரவில் இருள் சூழ்ந்த மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
திருப்பத்தூரில் இருந்து தருமபுரிக்கு செல்வோரும், அங்கிருந்து திருப்பத்தூருக்கு வருவோரும் இந்த மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின் றனர். இரவு நேரங்களில் வளைவுகளில் எதிர் எதிரே வாகனங்கள் வரும்போது சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகின்றன. போதிய மின் விளக்கு வெளிச்சம் இருந்தால் பெரு விபத்துக்களை தடுக்கலாம்.
அது மட்டுமின்றி, திருப்பத் தூரில் இருந்து ஆதியூர், செவ் வாத்தூர், குனிச்சி, சுந்தரம்பள்ளி, காக்கங்கரை, புதூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் மக்களும் இந்த மேம்பாலம் வழியாகத்தான் சென்று வருகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் மேம்பாலத்தில் எரியாத மின் விளக்குகளை சீரமைத்துத் தர வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மட்டுமின்றி இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மின் வாரிய அலு வலகம், சார் ஆட்சியர் அலுவலகம் என பலரிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை’’ என்றார்.
இது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்த போது, ‘‘திருப்பத்தூர் - தருமபுரி செல்லும் ஆதியூர் மேம்பாலத்தில் மேற்கு பகுதியில் 6 மின் விளக்குகள் எரிகின்றன. மீதியுள்ள மின் விளக்குகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT