Published : 15 Oct 2017 09:01 AM
Last Updated : 15 Oct 2017 09:01 AM

தீபாவளியை முன்னிட்டு 1.21 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு: 3,063 அரசு பேருந்துகள் இன்று இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் கோயம்பேடு உட்பட 5 இடங்களில் இருந்து 788 சிறப்புப் பேருந்துகள் உட்பட மொத்தம் 3,063 பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. சிறப்புப் பேருந்துகளில் 1.21 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் வசிக்கும் பெரும்பாலோர் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக பஸ், ரயில்களில் செல்வர். தென்மாவட்டங்களுக்கான ரயில்களில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வரும் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் வரும் 15, 16, 17-ம் தேதிகளில் 4,820 சிறப்புப் பேருந்துகள் உட்பட மொத்தம் 11,645 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட 3 நாட்களில் பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் கோயம்பேடு, அண்ணா நகர், பூந்தமல்லி, தாம்பரம் சானடோரியம், சின்னமலை (சைதாப்பேட்டை) ஆகிய 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து மாநகரின் மற்ற பகுதிகளை இணைக்கும் வகையில் 243 சிறப்பு பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கவுள்ளது. தீபாவளி சிறப்பு பேருந்துகளில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, 1,21,179 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் மட்டுமே 70,296 பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.4.11 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தீபாவளியை முன்னிட்டு 15-ம் தேதி (இன்று) முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, கோயம்பேட்டில் 2014, பூந்தமல்லியில் 433, தாம்பரம் சானடோரியத்தில் 190, சின்னமலையில் (சைதாப்பேட்டை பணிமனை) 186, அண்ணாநகரில் 240 என மொத்தம் 3,063 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், 788 சிறப்புப் பேருந்துகளும் அடங்கும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள 1, 2-வது நடைமேடைகளில் இருந்து முன்பதிவு செய்யப்படாத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை, அரியலூர், ஜெயங்கொண்டம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், கடலூர், சிதம்பரம், திருத்தணி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும். பெங்களூருவுக்குச் செல்லும் முன்பதிவு பேருந்துகளும் இங்கிருந்து புறப்படும்.

3, 4, 5, 6 நடைமேடைகளில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருச்சி, தஞ்சாவூர், சேலம், கரூர், சிவகங்கை, கம்பம், மதுரை, கோவை, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட பல்வேறு இடங்களுக்கு செல்லும் முன்பதிவு செய்யப்பட்ட விரைவு பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இதுதவிர, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 7, 8, 9 ஆகிய நடைமேடைகளில் இருந்தும் முன்பதிவு செய்யப்படாத விரைவுப் பேருந்துகள் இயக்கப்படும்.

மக்கள் கூட்டம் வர வர, வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு பேருந்துகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் ஒவ்வொரு நடைமேடையிலும் ஒலிபெருக்கி மூலம் பயணிகளுக்கு தகவல் அறிவிக்கப்படும். திருட்டுகளைத் தடுக்க பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x