

கரூர்: வீரணம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவில் பட்டியலினத்தவரை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தாததால் கோயிலுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். இதையடுத்து, ஆர்டிஓ காரை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, காவல் துறையினர் ஆர்டிஓவை மீட்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அமரவைத்த நிலையில், கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் வீரணம்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2-ம் நாளான நேற்று பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் கோயிலில் சாமி கும்பிட்டபோது அவருக்கு திருநீறு தர மறுத்து உள்ளே நுழையக்கூடாது என மற்றொரு தரப்பினர் தடுத்து வெளியே அனுப்பியுள்ளனர். இதனால், கோயில் நிர்வாகம் கோயிலுக்கு பூட்டு போட்டது. இதையடுத்து, இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதை அடுத்து, வட்டாட்சியர் முனிராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. மேலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
முடிவில், திருவிழாவை நடத்தி கொள்ளலாம் எனவும், கோயிலுக்குள பட்டியலினத்தவரை அனுமதிக்கவேண்டும். இல்லாவிடில் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்படும், கோயிலுக்கு சீல் வைக்கப்படும். கோயில் அரசு நிலத்தில் உள்ளதால் அரசே கோயில் நிலத்தை எடுத்துக் கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நிகழாண்டு கோயிலில் கிடாவெட்டு நடைபெறவில்லை. இன்று (ஜூன் 8) கோயில் பூட்டை திறந்து உள்ளே இருந்த கரகங்களை எடுத்து நீர் நிலையில் விட்டனர். இதுகுறித்து தங்கள் தரப்புக்குதான் வெற்றி ஒரு சிலர் தங்கள் வாட்ஸ்அப் க்ரூப்பில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பட்டியலினத்தவர் ஆத்திரமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி சம்பவ இடத்திற்கு வந்து கோயில் நிர்வாக தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பட்டியலினத்தவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதற்காக கோயிலை சுற்றி குழந்தைகளுடன் பெண்கள் அமர்ந்திருந்தனர். கோயிலுக்குள் அனுமதிக்கவேண்டும் என பட்டியலினத்தவர்களும் கோயிலுக்கு வெளியே கூடி காத்திருந்தனர்.
பட்டியலினத்தவரை கோயிலுக்கு அனுமதிக்காததை அடுத்தும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையில் வருவாய்த் துறையினர் கோயிலுக்கு சீல் வைத்தனர்.
இதையடுத்து, வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதம் செய்த மக்கள் கோட்டாட்சியர் புஷ்பாதேவியின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவரை மீட்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அமர வைத்தனர். இதையடுத்து, மக்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.