ஆவின் குழந்தைத் தொழிலாளர்கள் விவகாரத்தில் அமைச்சர் கூறுவது பொய்: அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: "சிறார்கள் ஆவின் நிறுவனத்தில் பணி செய்திருப்பதற்கான காணொளி ஆதாரங்கள் வெளியாகி அதிர்ச்சியளிக்கின்றன. ஆனாலும், அமைச்சர் இன்னும் உண்மையை மறைக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறார். ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காணொளிகள், அவர் சொல்வது பொய் என்பதை நிரூபிக்கின்றன" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியதாக செய்திகள் வெளியானதும், ஆரம்பம் முதல் அதனை மழுப்பி மறைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறார் தமிழக பால்வளத்துறை அமைச்சர். அரசு நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்தி, அதற்கான ஊதியத்தையும் வழங்காமல், போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அவல நிலைக்கு, தமிழக பால்வளத்துறை அமைச்சரே பொறுப்பு.
பால்வளத்துறை அமைச்சர், சிறார்கள் ஆவின் அலுவலகத்தில் பணியமர்த்தப்படவில்லை என்று கூறுகிறார். ஆனால், உண்மை நிலை நேரெதிராக இருக்கிறது. சிறார்கள் ஆவின் நிறுவனத்தில் பணி செய்திருப்பதற்கான காணொளி ஆதாரங்கள் வெளியாகி அதிர்ச்சியளிக்கின்றன. ஆனாலும் அமைச்சர் இன்னும் உண்மையை மறைக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறார். ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காணொளிகள், அவர் சொல்வது பொய் என்பதை நிரூபிக்கின்றன.
பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு, தமிழகம் சார்பாக மாணவர்களைத் தேர்வு செய்யாமல் அவர்கள் எதிர்காலத்தை வீணடித்திருக்கும் திறனற்ற திமுக அரசு, தற்போது, குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கிறது.உடனடியாக, சிறார்களை பணியில் அமர்த்தியவர்கள் அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட ஒப்பந்ததாரரை மேற்கொண்டு அரசு பணிகளில் இடம்பெறாத வண்ணம், கருப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஆவினில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘அம்பத்தூர் ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இது வேண்டும் என்றே ஆவின் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும்நோக்கத்தில் சித்தரிக்கப்பட்ட செய்தியாகும். இச்செயலைத் திட்டமிட்டு அரங்கேற்றியவர்கள் மீது குழந்தைகள் உரிமை பாதுகாப்புக் குழு மூலம் உரியநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தவறான செய்தியைச் சித்தரித்து வழங்கிய ஊடகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கச் சட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தடைச்சட்டம் மற்றும் வளர் இளம் பருவத்தினர் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், 14 வயதுக்கு உட்பட்டவர்கள், சிறார்களை பணியமர்த்தக்கூடாது. ஆவின் அலுவலகங்களில் சிறார்கள் பணியமர்த்தப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆட்சியர், காவல் துறை மூலம் முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆவணங்களையும் சரிபார்த்துள்ளோம்’ என்று அவர் கூறியிருந்தார்.
