

சென்னை: வேளச்சேரி பறக்கும் ரயில் சேவைக்கும் பாதிப்பு இல்லாமல் சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது பாதை பணியை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசித்து வருவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் மிக முக்கியமான புறநகர ரயில் வழித்தடமாக தாம்பரம் - சென்னை கடற்கரை வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தில் சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 3 பாதைகள் மட்டுமே உள்ளன. இவற்றில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பாதையில் விரைவு ரயில்கள் அல்லது சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 4-வது ரயில் பாதை இல்லாத காரணத்தால், கூடுதல் ரயில்கள் இயக்கவோ அல்லது சரக்கு ரயில்களை குறிப்பிட்ட நேரத்தில் இயக்கவோ இயலாத நிலை உள்ளது.
இதுதவிர, வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் பெரும்பாலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுவதால், சென்ட்ரல் ரயில் நிலையம் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இங்கு கூட்டத்தைக் குறைக்கும் நோக்கில், தாம்பரத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையம் வழியாக வட மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்க புதிய பாதை தேவைப்படுகிறது.
இந்நிலையில், சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4.3 கி.மீ. தொலைவுக்கு 4-வது புதிய பாதை அமைக்கும் திட்டத்துக்கு நடப்பாண்டில் மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் பாதை திட்டப் பணிகளை விரைவில் தொடங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், 4-வது வழித்தட பணிகளுக்காக, சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்ய முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியானது. இதன்படி வேளச்சேரி – கடற்கரை இடையே இயக்கப்படும் பறக்கும் மின்சார ரயில்கள் ஜூலை 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை 7 மாதங்களுக்கு சேப்பாக்கம் வரை மட்டும் இயக்க முடிவு செய்யப்பட்டது. இந்த உத்தரவு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "வேளச்சேரி பறக்கும் ரயில் சேவைக்கு பாதிப்பு இல்லாமல் சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது பாதை பணியை மேற்கொள்வது ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது. வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதை ரத்து செய்தால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இதற்கு மாற்றாக செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகத்துடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேளச்சேரி பறக்கும் ரயில் சேவைக்கு பாதிப்பு இல்லாமல் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது" என்று அவர்கள் கூறினர்.