Published : 08 Jun 2023 03:38 PM
Last Updated : 08 Jun 2023 03:38 PM

குறைந்தபட்ச ஆதரவு விலையை குறைவாக உயர்த்தி விவசாயிகளை வஞ்சிக்கிறது மத்திய அரசு: முத்தரசன்

சென்னை: மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை குறைவாக உயர்த்தி விவசாயிகளை வஞ்சிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நடப்பாண்டு கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு விலைகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த தொகை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வுகளை கருத்தில் கொண்டால் விலை உயர்வு அர்த்தமற்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் மோடியும், பாஜகவும் ஆட்சியில் அமர்ந்தால் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம்.

டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை ஏற்று உற்பத்தி செலவிற்கு மேல் 50 சதவீதம் கூடுதல் தொகை சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை பத்தாண்டுகளாக அமலாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓராண்டு காலம் நடந்த விவசாயிகள் போராட்டத்தால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய சட்டபூர்வ நடைமுறைகள் உருவாக்கப்படும் என கொடுத்த உறுதி மொழியும் நிறைவேற்றப்படவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் உரங்களுக்கான மானியங்களை வெட்டிக் குறைத்துவிட்டது. சில வகை உரங்களுக்கும், பூச்சி மருந்துகளுக்கும் மானியங்களை முற்றிலுமாக நீக்கிவிட்டது.

கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கையால் அதானி - அம்பானி குழுமங்கள் லாபம் பெற மோடியின் ஒன்றிய அரசு ஆதரவு காட்டியுள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதில் மோடியின் ஒன்றிய அரசு விவசாயிகளை வஞ்சித்திருப்பதை கண்டிப்பதுடன், விவசாயிகள் விரோத வஞ்சக கொள்கையை அதிகாரத்தில் இருந்து அகற்றும் அரசியல் நடவடிக்கையில் விவசாயிகள் ஒன்றுபட்டு ஈடுபட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x