

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த 5 ஆண்டுகளாக மூடப்பட்டுஉள்ள நிலையில், ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றுவது, ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியின் கரையை சீரமைப்பது, பசுமையை பராமரிப்பது போன்ற பணிகளுக்கு அனுமதி அளித்தது. இப்பணிகளை மேற்கொள்ள தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ்குமார்தலைமையில் 9 பேர் கொண்ட மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், உள்ளூர் மேலாண்மை குழுவினர் நேற்று காலை 11.50 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு வந்து, ஆலை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜிப்சத்தை பார்வையிட்டனர்.
ஆலையில் இருந்து கழிவுகளை வெளியில் கொண்டு வரும் வாசல் பகுதியை பார்வையிட்டு, அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். மதியம் 1.30 மணி வரை ஆய்வு நீடித்தது.
இதற்கிடையே, ஆலையைச் சுற்றி போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.