

காரைக்குடி: சிங்கப்பூரில் பணிபுரிந்தபோது தடை செய்யப்பட்ட அமைப்புக்கு நிதியுதவி அளித்தது தொடர்பான புகாரை விசாரிக்க, காரைக்குடியை சேர்ந்த இளைஞரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.
காரைக்குடி வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (43). இவர் சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தார். 6 மாதங்களுக்கு முன்பு, அங்கிருந்து இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு நிதியுதவி அளித்ததாக புகார் எழுந்தது.
சிங்கப்பூரிலிருந்து வெளியேற்றம்: இதுகுறித்து விசாரணை நடத்திய சிங்கப்பூர் போலீஸார், சாகுல் ஹமீதின் பணி அனுமதியை ரத்து செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி, ஊருக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை வைத்தியலிங்கபுரத்தில் உள்ள சாகுல் ஹமீது வீடு, செஞ்சை பள்ளிவாசலில் உள்ள சாகுல் ஹமீதின் மாமனார் முகமது அலி ஜின்னா(75) வீடு ஆகிய இடங்களில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் கொண்ட 10 பேர் விசாரணை நடத்தினர்.
தடை செய்யப்பட்ட இயக்கத்துடனான தொடர்பு, பணப் பரிவர்த்தனை குறித்து அவர்களது குடும்பத்தினரிடம் தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை நடந்தது.
ஆவணங்கள், மொபைலை கைப்பற்றியதோடு, சாகுல் ஹமீதை விசாரணைக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றனர். முகமது அலி ஜின்னாவை இன்று (ஜூன் 8) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் கொடுத்துள்ளனர்.