

வேலூர்: வேலூர் ஆவினில் இருந்து போலி பதிவெண் வாகனம் மூலம் 2,300 லிட்டர் பால் கடத்த முயன்ற வழக்கில் 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் ஆவின் பால் பண்ணையில் ஒரே பதிவெண் கொண்ட 2 வாகனங்கள் நேற்று முன்தினம் பால் பாக்கெட்டுகளை எடுத்துச்செல்ல வரிசையில் நின்றுள்ளன. அதை திடீர் ஆய்வின்போது பொதுமேலாளர் (பொறுப்பு) சுந்தரவடிவேலு கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து, 2 வாகனங்களின் ஆவணங்களையும் ஆய்வு செய்தபோது ஒரு வாகனம் போலியானது என்பது தெரியவந்தது. அந்த வாகனத்தை பறிமுதல் செய்து வளாகத்தில் நிறுத்தினர். இந்த வாகனத்தின் மூலம் சுமார் 2,300 லிட்டர் பால் கடத்த இருந்தது தடுக்கப்பட்டுள்ளது.
மிரட்டல் புகார்: இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள ஆவின் விற்பனை பிரிவு உதவி பொது மேலாளர் சிவக்குமார், அதில், இரவு 11.30மணியளவில் போலி பதிவெண் வாகனத்தை அதன் உரிமையாளரும் ஒப்பந்ததாரருமான சிவக்குமார், ஓட்டுநர் விக்கி ஆகியோர் எடுத்துச் செல்ல முயன்றபோது நான் தடுத்தேன். என்னை ஆபாசமாக திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்து வண்டியை எடுத்துச் சென்றுவிட்டனர்’ என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்ளிட்ட 2 பேர் மீது சத்துவாச்சாரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிபிசிஐடி விசாரணை தேவை: இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கூறும்போது, ‘‘ஆவின் விற்பனை பிரிவு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த கடத்தல் நடைபெற்றிருக்காது. இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.