

ராமநாதபுரம்: யுனெஸ்கோவின் உயிர்க்கோள காப்பக மேலாண்மைக்கான ‘மைக்கேல் பட்டீஸ்’ விருதுக்கு மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக இயக்குநரும் வன உயிரினக் காப்பாளருமான ஜகதீஷ் பகான் சுதாகர் தேர்வாகியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் இயற்கை வளத்தைப் பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதையடுத்து கடல்வாழ் உயிரின தேசிய பூங்காவின் காப்பாளரும் உயிர்கோள காப்பக இயக்குநருமான ஜகதீஷ் பகான் சுதாகருக்கு யுனெஸ்கோ அமைப்பால் ‘மைக்கேல் பட்டீஸ்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருதுடன் ரூ.9.91 லட்சம் (12 ஆயிரம் அமெரிக்க டாலர்) வழங்கப்பட உள்ளது. இந்த விருது பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஜூன் 14-ம் தேதி வழங்கப்பட இருக்கிறது.
விருது பெறவுள்ள தேசியப் பூங்காவின் காப்பாளர் ஜகதீஷ் பகான் சுதாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் இயற்கை வளத்தை பாதுகாக்க எடுத்த முயற்சியின் காரணமாக ‘மைக்கேல் பட்டீஸ்’ விருது கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக இவ்விருது நமக்கு கிடைத்துள்ளது தமிழகத்துக்குப் பெருமை.
வனப் பாதுகாப்புக் குழுவினர், சுய உதவிக் குழுவினர் மூலம் மரக்கன்றுகள் நடுதல், பனைமரம் நடுதல் உள்ளிட்ட பல பணிகளைச் செய்துள்ளோம். மேலும் கடலோரப் பகுதியில் ஏராளமான மாங்குரோவ் மரக்கன்றுகள் நட்டுள்ளோம். கடல் ஆமைகளைப் பாதுகாக்க அதன் முட்டைகளைச் சேகரித்து பொறிப்பகத்தில் வைத்து பொறித்ததும் குஞ்சுகளை கடலில் விட்டுள்ளோம்.
கடல் பசுக்களைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள், கடற்பகுதிகளில் பிளாஸ்டிக்கை தவிர்க்கும் வகையில் தனுஷ்கோடி மற்றும் ஏர்வாடி பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து மஞ்சள் பை வழங்கி வருகிறோம். மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். இந்த விருதை வனத் துறைப் பணியாளர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். விருதுக்கு தேர்வானதற்கு பாராட்டுத் தெரிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் வாழ்த்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக இயக்குநர் ஜகதீஷ் பகான் சுதாகர், யுனெஸ்கோ விருதுக்கு தேர்வாகி, தமிழக வனத் துறைக்கும் தமிழக அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு பாராட்டுகள்.
நமது அரசு அமைத்த மரைன் எலைட் படையால்தான் இது சாத்தியமானது என்று அவர் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன். ஜகதீஷ் பகான் சுதாகருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.