

சென்னை: சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்.
இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத் வரும் 29-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இஸ்லாமியர்கள் ஒவ்வோர் ஆண்டும் புனித ஹஜ் யாத்திரையாக சவுதி அரேபியாவில் மதினா மெக்காவுக்கு செல்வது வழக்கம். இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு, மத்திய,மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன.
சிறப்பு விமானங்கள்: குறைந்த விமான கட்டணத்தில், பயணிக்க தனி சிறப்பு விமானங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஜூன் 7-ம் தேதிமுதல் வரும்21-ம் தேதிவரை இயக்கப்படும் சிறப்பு விமானங்களில் 4,000-க்கும் மேற்பட்டோர் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றுகாலை 11.20 மணிக்கு ஜெட்டாவுக்கு முதல் சிறப்பு விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 254 பேர் பயணம் செய்தனர். இரண்டாவது விமானம் இன்றுபகல் 12.10 மணிக்கு சென்னையில் இருந்து ஜெட்டா புறப்படுகிறது. அதில் 162 பேர் பயணிக்கவுள்ளனர்.
ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முதல் குழுவினரை சென்னைசர்வதேச விமான நிலையத்தில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர்கள் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார். ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு, இவர்கள் ஜூலைமுதல் வாரத்தில் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை திரும்பவுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில்அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், “ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இணைமானியமாக ரூ.10 கோடியை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்” என்றார்.