Published : 08 Jun 2023 06:34 AM
Last Updated : 08 Jun 2023 06:34 AM

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் | 415 மீட்டருக்கு சுரங்கப்பாதை அமைத்து வேணுகோபால் நகரை அடைந்த முதல் இயந்திரம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் -சிறுசேரி வரையிலான 3-வது வழித்தடத்தில் சென்னை மாதவரத்தில் மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணியின் முதல்கட்டம் நேற்று நிறைவுபெற்றது. வேணுகோபால் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுரங்கத்தை துளையிட்டு வெளியே வந்த இயந்திரம். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம், மாதவரம் பால்பண்ணையில் இருந்து415 மீட்டருக்கு சுரங்கப்பாதை அமைத்து, வேணுகோபால் நகரை வெற்றிகரமாக அடைந்தது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மொத்தம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெறுகின்றன. இதில், 43 கி.மீ. சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதிகபட்சமாக மாதவரம் – சிப்காட் தடத்தில் 26.7 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைகிறது.

இதற்கிடையே, மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சுரங்கம் தோண்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் மாதவரத்தில் கடந்தஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்தார். ஆனைமலை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம், மாதவரம் பால்பண்ணையில் இருந்து மொத்தமுள்ள 415 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை பணியை முடித்துக் கொண்டு, நேற்று மாலை 4:45 மணி அளவில் வேணுகோபால் நகரை வெற்றிகரமாக அடைந்தது.

இந்த நிகழ்வில் சென்னை மெட்ரோரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக், திட்ட இயக்குநர் அர்ஜுனன் உட்பட பல அதிகாரிகளும், பணியாளர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

மாதவரம் பால்பண்ணையில் இருந்து கடந்த 5-ம் தேதி தொடங்கியுள்ள சேர்வராயன் என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் சுரங்கப்பாதை பணியை முடித்து, வரும் ஆகஸ்ட் மாதத்தில் வேணுகோபால் நகரை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மெட்ரே ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சுரங்கம் தோண்டும் பணிகள் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. தற்போது 6 இயந்திரங்கள் சுரங்கம் தோண்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை சுரங்கம் தோண்டும் பணிக்கு பயன்படுத்த உள்ளோம். முதல் சுரங்க இயந்திரம் தனது பணியை நிறைவு செய்துள்ளது. அடுத்ததாக, இந்த இயந்திரத்தை அயனாவரத்தில் பயன்படுத்த உள்ளோம்.

இரண்டாம் மெட்ரோ திட்டத்தில், உயர்மட்ட ரயில் பாதைக்கான கட்டுமானபணிகள் 2024-ம் ஆண்டு முடிந்துவிடும்.இதையடுத்து, எஞ்சியுள்ள பணிகளைமுடித்து 2025-ம் ஆண்டு இறுதி முதல் படிப்படியாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கிவைக்கப்படும். வரும் 2027-ல் தொடக்கத்தில் அனைத்து உயர்மட்ட மெட்ரோ பணிகளும் முடிக்கப்படும். சுரங்கம் பாதையில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளோம். வரும் 2028-ல் சுரங்கப்பாதையில் பணிகள்நிறைவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x