Published : 08 Jun 2023 06:31 AM
Last Updated : 08 Jun 2023 06:31 AM
சென்னை: பள்ளிக்கரணை ஜெயச்சந்திரன் நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் வராததால், குடியிருப்புகளில் கழிவுநீரை அகற்றவே மாதம்தோறும் லட்சக்கணக்கில் செலவழிக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிக்கரணை மற்றும் மேடவாக்கம் பகுதி மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள பகுதி. இதில் பள்ளிக்கரணையும், ஜல்லடியான் பேட்டை பகுதியும் சென்னை மாநகராட்சிக்குள் வருகிறது. மேடவாக்கம், பெரும்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிறது. சென்னை மாநகராட்சியின் இறுதி பகுதியான பள்ளிக்கரணை, ஜல்லடியான் பேட்டையில் கழிவுநீர் பிரச்சினை மிகப்பெரியதாக உருவெடுத்துள்ளது.
குறிப்பாக, பள்ளிக்கரணை- மேடவாக்கம் இடையில் அமைந்துள்ள ஜெயச்சந்திரன் நகர் பகுதியில் குடியிருப்புகள் அதிகளவில் உருவாகியுள்ள நிலையில், பாதாளசாக்கடை திட்டம் இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகுந்தசிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை’ உங்கள் குரல் பிரத்யேக எண்ணில் அழைத்த வாசகர் பி.சிவக்குமார் கூறியதாவது: இந்த பகுதியில் 7 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சாலை உள்ளிட்ட வசதிகள் இருந்தாலும், குடிநீர், கழிவுநீர் வசதிகள் இல்லை.
ஆழ்துளை கிணறுகள் மற்றும் தேவைக்கு வெளியில் லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கி சமாளித்து வந்தாலும், கழிவுநீர் பிரச்சினை மிகவும் அதிகமாக உள்ளது. நான் வசிக்கும் குடியிருப்பில் 100 வீடுகள் உள்ளன. வீடு வாங்கும்போது குடிநீர், கழிவுநீர், மின் இணைப்புக்காக குறிப்பிட்ட தொகை செலுத்தியுள்ளோம். அதன்பின், தற்போது வீட்டுவரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்துகிறோம். ஆனால், கழிவுநீர் இணைப்பு இதுவரை இங்கு வரவில்லை.
கூடுதல் செலவுகள்: இதனால், கழிவுநீர் எடுத்துச் செல்லும் லாரிக்கு தினசரி 2 அல்லது 3 லோடு என்ற வகையில்ரூ.3 ஆயிரம் வரை செலவழிக்கப்படுகிறது. இதன்மூலம் மாதம் தோறும் பராமரிப்பு தொகையே ஒரு வீட்டுக்கு நாங்கள் இதர செலவுகள் போக கூடுதலாக 2 ஆயிரத்துக்கும் மேல் செலுத்தவேண்டி வருகிறது.
சில குடியிருப்புகளில் தண்ணீரை சுத்தப்படுத்தி வெளியில் விடுகின்றனர். இதுவும் பிரச்சினையாகி வருகிறது. எனவே, அரசு விரைவாக இந்தபகுதிக்கு பாதாள சாக்கடை திட்டத்தை அமைத்து தரவேண்டும். குடிநீர் இணைப்புகளையும் விரைவில் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
இதுகுறித்து, சென்னை குடிநீர்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னை மாநகராட்சியுடன் கடந்த 2011-ம் ஆண்டு 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டன. இந்த இணைக்கப்பட்ட பகுதிகளில் தற்போது படிப்படியாக கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. 17 பகுதிகளில் பணிகள் முடிந்துவிட்டன.
பள்ளிக்கரணை உள்ளிட்ட 9 பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜல்லடியான் பேட்டை உள்ளிட்ட 16 பகுதிகளில் பணிகள் எடுக்கப்பட உள்ளது. எனவே, ஜெயச்சந்திரன் நகர் பகுதியில் விரைவில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT