Published : 08 Jun 2023 06:35 AM
Last Updated : 08 Jun 2023 06:35 AM

சாலையோர ஆக்கிரமிப்புகளால் ஒத்தையடி பாதையான என்எஸ்சி போஸ் சாலை: உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் காட்சிகள் மாறவில்லை

நீதிமன்ற உத்தரவை விளக்கும் தகவல் பலகை

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவை மீறி போலீஸாரின் துணையுடன் பாரிமுனை பூக்கடை பகுதியில் உள்ளநடைபாதையை ஒருபுறம் சாலையோர வியாபாரிகளும், மறுபுறம் ஆட்டோக்களும் போட்டி போட்டு ஆக்கிரமித்து வருவதால் பொதுமக்கள் நடப்பதற்கு கூட இடமின்றி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.

சென்னை பாரிமுனை பகுதியில் தொடங்கி வால்டாக்ஸ் சாலை வரை உயர் நீதிமன்றம் அமைந்துள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சாலை (என்.எஸ்.சி.போஸ் சாலை) எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் உள்ள ஒவ்வொரு தெருக்களும் ஒவ்வொரு தொழிலுக்குப் பெயர்போனவை.

பர்மா பஜார் வெளிநாட்டு எலக்ட்ரானிக் பொருட்களுக்கும், சைனா பஜார் மொபைல் போன்களுக்கும், ரத்தன் பஜார் அலங்கார விளக்குகளுக்கும், குடோன் தெரு ஜவுளி வியாபாரத்துக்கும், பந்தர் தெரு டைரி,காலண்டர், பேப்பர் தொழிலுக்கும், ஆண்டர்சன் தெரு திருமண அழைப்பிதழுக்கும், பத்ரியன் தெரு பூ வியாபாரத்துக்கும், கோவிந்தப்ப நாயக்கன் தெருஉலர்பழங்கள் மற்றும் எலெக்ட்ரிக்கல் வியாபாரத்துக்கும், நைனியப்பா தெரு எவர்சில்வர், அலுமினிய பாத்திரங்களுக்கும், மிண்ட் தெரு காஸ்மெடிக்ஸ் மற்றும் கவரிங் நகைகளுக்கும், சவுகார்பேட்டை ரெடிமேட் ஆயத்த ஆடைகளுக்கும், தேவராஜ் முதலி தெரு முகம் பார்க்கும் கண்ணாடி கடைகளுக்கும், ராசப்ப செட்டி தெரு ஹார்டுவேர்ஸ் பொருட்களுக்கும், மலையப்பெருமாள் கோயில் தெரு தாம்பூலப் பைகள் மற்றும் திருமண, சடங்கு பொருட்களுக்கும், கந்தக்கோட்டம் பூஜை சாமான் பொருட்களுக்கும், பிராட்வே சாலை ஆப்டிக்கல்ஸ் மற்றும் சைக்கிள் கடைகளுக்கும், ஸ்டிங்கர் தெருகாலணிகளுக்கும் தவிர கொத்தவால்சாவடி மார்க்கெட் மொத்தவிலை காய்கறி விற்கும் இடமாக அமைந்துள்ளன.

பி.ஜெகந்நாத்

இப்பகுதியில் தவிர வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம், ஜெயின் என அனைத்து மதத்தவர்களின் பாரம்பரிய கோயில்கள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இத்தனை தொழில் வியாபாரங்களும் ஒரே பகுதியில் குழுமியிருப்பதாலோ என்னவோ எந்நேரமும் பாரிமுனை - பூக்கடை - வால்டாக்ஸ் சாலை வரை உள்ள என்எஸ்சி போஸ் சாலை நெரிசல் மிகுந்த பகுதியாகவே காட்சியளிக்கிறது.

ஆனால் என்எஸ்சி போஸ்சாலையின் இருபுறங்களையும் சாலையோர வியாபாரிகளும், ஆட்டோக்கள் மற்றும் தள்ளுவண்டிகளும் மொத்தமாக ஆக்கிரமித்து விட்டதால் இப்பகுதியில் நடந்து செல்வதற்கு கூட வழியின்றி பொதுமக்கள் திண்டாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவே பண்டிகை நாட்கள் என்றால் இந்த நெரிசல் மேலும்அதிகரிக்கும். இந்த நெரிசலைப் பயன்படுத்தி அவ்வப்போது பிக்பாக்கெட் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இத்தனைக்கும் பூக்கடை காவல் நிலையமும் அருகில் தான் உள்ளது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஏற்கெனவே சமூக ஆர்வலரான டிராபிக்ராமசாமி மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த ரகு உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர். அதன் காரணமாக என்எஸ்சி போஸ் சாலையில் சாலையோர வியாபாரத்துக்கு தடை விதித்தும், இங்குள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு தற்போது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இந்த ஆக்கிரமிப்புகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பிக்கும்போது மட்டும் போலீஸார் ஜெட்வேகத்தில் நடவடிக்கை எடுப்பதும், சிறிதுநேரத்தில் வியாபாரிகள் மீண்டும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் போடுவதும் வாடிக்கையாக உள்ளது.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் கூறும்போது, ‘‘என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதை வியாபாரத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருப்பதை அறிவிப்பு பலகையாக வைத்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், ஆனால்அந்த உத்தரவை அமல்படுத்துவதில் மட்டும் மெத்தனம் காட்டி வருகின்றனர். சாலையோர வியாபாரிகளின் அன்றாட தொழில் அவர்களின் வாழ்வாதாரம் என்றாலும் சாலைகளை ஆக்கிரமித்து கடைகளை நடத்துவதால் பொதுமக்கள் சொல்ல முடியாத இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சாலையோர வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கி கொடுத்து, சாலை ஓரங்களையும், நடைபாதை ஆக்கிரமிப்புகளையும் போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அகற்ற வேண்டும், என்றார்.

அப்பகுதியில் கடை நடத்தும் பெயர் கூற விரும்பாத உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘‘சாலையோர வியாபாரிகள் பிரச்சினை பல ஆண்டுகாலமாக உள்ளது. ஆட்டோக்களுக்கும் தனியாக ஸ்டாண்டு கிடையாது. மீன்பாடி வண்டிகளை தடை செய்து பல ஆண்டுகளாகி விட்டது. இன்னமும் மீன்பாடி வண்டிகள் அதிகளவில் உள்ளது. என்எஸ்சி சாலையையே சிலர் குடியிருப்புகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். உயர் நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்தாலும் சாலையோர வியாபாரிகளை இங்கிருந்து கிளப்புவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அவர்களுக்கென தனியாக கடைகளை அமைத்துக் கொடுத்தால் மட்டுமே சாத்தியம், என்றார்.

சாலையோர வியாபாரிகள் சிலர் கூறுகையில், ‘‘மொத்தம் 300வியாபாரிகள் இந்த சாலையைநம்பித்தான் அன்றாடம் பிழைப்புநடத்திவருகிறோம். குடும்ப அட்டை முதல் ஆதார் அட்டை வரை அனைத்தும் இங்கு தான்உள்ளது. திடீரென இந்த இடத்தைகாலி செய்யுன்னு சொன்னால் நாங்கள் எங்கே செல்வோம். இதுவரை 10-க்கும் மேற்பட்ட இடங்களை சுட்டிக்காட்டி அங்கு எங்களுக்கு கடைகளை அமைத்துக் கொடுக்கும்படி கூறிவிட்டோம். ஆனால் எந்த ஆட்சியாளர்களும் எங்களைகண்டுகொள்வதே கிடையாது. முத்துசாமி பாலத்தின் அருகேஉள்ள காலியிடத்தைக் கேட்டோம். அங்கு பூங்கா வரப்போகிறது எனக்கூறி விட்டனர்.

பூக்கடை போக்குவரத்து போலீஸார் கூறுகையில், ‘‘ இந்த ரோட்டில் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்குள் நாங்கள் படாதபாடு பட்டு வருகிறோம். ஆனால் உயர் நீதிமன்றம் எங்களைத்தான் சாடுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை, என்றனர்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘என்எஸ்சி போஸ் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்குவது குறித்துமேயர், அமைச்சர் உள்ளிட்டோருடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x