Published : 08 Jun 2023 04:10 AM
Last Updated : 08 Jun 2023 04:10 AM
புதுச்சேரி: புதுச்சேரி நகரில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகளுக்காக ரூ.3.5 கோடி மதிப்பில் சிசிடிவி கேமரா, எப்எம் ரேடியோ, செல்போன், லேப்டாப் சார்ஜர் செய்வது உள்ளிட்ட நவீன வசதிகளுடன் 20 ஸ்மார்ட் பயணியர் நிழற்குடைகள் அமைக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் பெரும்பாலான பேருந்துநிறுத்தங்களில் பயணியர் நிழற்குடை இல்லை. இருக்கிற நிழற்குடைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் பேருந்துகளுக்காக காத்திருக் கும் பயணிகள் வெயில், மழைகாலங்களில் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி போக்குவரத்து துறை ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதுச்சேரி நகரில் நவீன வசதிகளுடன் 20 ஸ்மார்ட் பயணியர் நிழற்குடைகள் அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கான இடங்கள் கண்டறியப்பட்டு பூர்வாங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு ஆலோசகர் இறுதி செய்யப்பட்டுள்ளார். மேலும் திட்டத்தின் முன்மொழிவுக்கான கோரிக்கையை தயாரிக்கும் செயல்முறை நடந்து வருகிறது. இதற்கான டெண்டர் விரைவில் விடப்பட்டு, திட்டத்துக்கான ஒப்பந்ததாரர் (சிஸ்டம் இன்டக்ரேட்டர்) ஜூலைக்குள் இறுதி செய்யப்பட்டு உடனே பணிகள் தொடங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், “ புதுச்சேரி நகரில் பொதுமக்கள், பயணிகள் வசதிக்காக 20 ஸ்மார்ட் பயணியர் நிழற்குடைகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டநிதி ரூ.3.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், ராஜா தியேட்டர் சிக்னல், முருகா தியேட்டர் சந்திப்பு, வெங்கட சுப்பா ரெட்டியார் சதுக்கம், எஸ்.வி. படேல் சாலை, சுப்பையா சாலை-செஞ்சி சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்கள் கண்டறியப்பட்டு பூர்வாங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது மாறுபடலாம்.
இந்த ஸ்மார்ட் பயணியர் நிழற்குடைகளில் சிசிடிவி கேமராக்கள், நவீன இருக்கை ஏற்பாடுகள், எல்இடி விளக்குகள், எப்எம் ரேடியோ, செல்போன், லேப்டாப்-களுக்கான சார்ஜிங் சாக்கெட்டுகள் மற்றும் சக்கர நாற்காலியில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்வுதளங்கள் போன்ற பல வசதிகள் இருக்கும்.
பயணிகள் தகவல் அமைப்பும் பொருத்தப்பட்டிருக்கும். இது பேருந்துகளின் வழித்தட எண்கள், பேருந்துகள் வந்து சேரும் தகவல் மற்றும் அவற்றின் மதிப்பிடப்பட்ட இடம், வருகை நேரம் போன்ற நிகழ்நேர போக்குவரத்துத் தரவுகளை வழங்கும். அதோடு இந்த ஸ்மார்ட் பயணியர் நிழற்குடைகளில் இரண்டு எல்இடி பேனல்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
ஒன்று பேருந்துகளின் வருகையைப் பற்றிய தகவலை வழங்கும், மற்றொன்றில் தனியார் நிறுவன விளம்பரங்கள் இடம்பெறும். இதில் வரும் வருவாய் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அல்லது நகராட்சிக்கு செல்லும். ஒரு சில நிழற்குடைகளில் ‘ஸ்மார்ட் போல்' பொருத்தப்படும். இதன் மூலம் இப்பகுதியில் உள்ள சுற்றுப்புற காற்றின் தரம் குறித்த விவரங்களை அறிய முடியும்.
இது ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்படும். இத்திட்டத்துக்கான டெண்டர் விரைவில் விடப்பட்டு ஒப்பந்ததாரர் ஜூலைக்குள் இறுதி செய்யப்பட உள்ளார். அதன்பிறகு இதற்கான பணிகள் தொடங்கும். இந்த ஸ்மார்ட் பயணியர் நிழற்குடை முதியவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாகவும், ஏற்றதாகவும் இருக்கும்’’என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT