Last Updated : 22 Oct, 2017 11:35 AM

 

Published : 22 Oct 2017 11:35 AM
Last Updated : 22 Oct 2017 11:35 AM

இந்தியாவில் கடந்த ஒரே ஆண்டில் இரு சக்கர வாகன விபத்துகளில் 36,803 பேர் பலி: விபத்து, உயிரிழப்புகளில் தமிழகம் முதலிடம்

இந்தியாவில் கடந்த ஆண்டு இரு சக்கர வாகன விபத்துகளால் 36 ஆயிரத்து 803 பேர் பலியாகி இருப்பதும், விபத்துகள் அதிகரித்திருப்பதும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டில் மட்டும் 5,01,020 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,31,726 விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த விபத்துகளில் 1,46,138 பேர் உயிரிழந்துள்ளனர். 5,19,446 பேர் காயமடைந்துள்ளதாக கடந்த ஆண்டின் சாலை விபத்து பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலை ஆய்வு செய்தபோது, கடந்த ஆண்டின் மொத்த சாலை விபத்துகளில் 28.8 சதவீத விபத்துகள் இரு சக்கர வாகனங்களால் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இரு சக்கர வாகன விபத்துகள் மட்டும் 1,44,391 ஆகும். இதில் 36,803 பேர் இறந்துள்ளனர். 1,35,343 பேர் காயமடைந்துள்ளனர்.

அடுத்து கார்கள், ஜீப்கள், சுற்றுலா வாகனங்கள், மேக்சிகேப் வாகனங்களால் 1,18,438 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 28,610 பேர் இறந்துள்ளனர். பஸ்களால் 41,832 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 10,450 பேர் இறந்துள்ளனர். 55,083 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆட்டோக்களால் 30,340 விபத்துகளில் 6,155 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரு சக்கர வாகனங்களால் விபத்துகள் பெருகி வருவது போக்குவரத்து அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு சக்கர வாகனங்களால் விபத்துகள் அதிகரிப்பதற்கு என்ன காரணம் என்பது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

வாகன பெருக்கமே காரணம்

இதுகுறித்து கோவை மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெ.கே.பாஸ்கரன் கூறியதாவது: இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இரு சக்கர வாகனங்கள் விற்பனைக்காக வியாபாரிகள் போட்டிபோட்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். முன் தொகையில்லாமல் மோட்டார் வாகனங்கள் விற்கப்படுகின்றன. வட்டி இல்லாதது, ஆவணங்கள் தேவையில்லாதது, சுலபத் தவணை ஆகிய காரணங்களால் இரு சக்கர வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விபத்துகளுக்கு வாகனங்கள் அதிகரிப்பும் ஒரு காரணமாக உள்ளது.

இரு சக்கர வாகனம் வாங்குவோருக்கு வாகனம் ஓட்டத் தெரியுமா?, உரிய ஆவணங்கள் வைத்துள்ளாரா? என்பதை எல்லாம் பார்க்காமல் வாகனத்தை விற்கின்றனர். வாகனம் விற்ற பிறகும் சாலை விதிமுறைகளை தெரிவிப்பதில்லை. இதனால் ஓட்டத் தெரியாமல் ஓட்டுவதால் விபத்துகளில் சிக்குகின்றனர். பலர் ஹெல்மெட்டை அணியாமல் வாகனம் ஓட்டுகின்றனர்.

அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்லுதல், அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லுதல் என சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை ஓட்டிச் செல்லுதல், போக்குவரத்து காவலர்களின் எச்சரிக்கையை மீறுதல் போன்ற செயல்களால் நொடிப்பொழுதில் விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை தவறாமல் பின்பற்றி வாகனங்களை ஓட்ட வேண்டும் என்றார்.

முதலிடத்தில் தமிழகம்

இந்தியாவின் மொத்த சாலை விபத்துகள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதே போல் உயிரிழப்பிலும் தமிழகம் தான் முதலிடம். கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 25,147 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 4,887 பேர் உயிரிழந்துள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் 15,005 விபத்துகளில் 4,514 பேரும், உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் 7,330 விபத்துகளில் 3,993 பேரும் இறந்துள்ளனர். இந்த மாநிலங்கள் விபத்து பட்டியலில் 2 மற்றும் 3-வது இடத்தில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x