Published : 08 Jun 2023 07:12 AM
Last Updated : 08 Jun 2023 07:12 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா தலைமையிடமாக இருந்தும் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்து பயணிகள் அவதிப்படுகிறார்கள். இப்பகுதியில் போதிய அளவுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், தாலுகா தலைமை இடமாக அமைந்துள்ளது. இங்கு தாலுகா அலுவலகம் , ஒன்றிய அலுவலகம் , மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் , பத்திரப்பதிவு அலுவலகம் , சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் , வேளாண்மைதுறை அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளன.
இதனால் ராதாபுரத்துக்கு சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆனால் இவர்கள் வந்து செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், திசையன்விளை , தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் , கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, ராணித்தோட்டம் ஆகிய இடங்களில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து 20 பேருந்துகள் ராதாபுரத்துக்கு இயக்கப்படுகிறது. இதில் சில பேருந்துகள் முறையாக வருவதில்லை என பயணிகள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
ஞாயிறு மற்றும் திருவிழா நாட்களில் பேருந்துகள் மாற்று வழியில் இயக்கப்படுவதாக தெரிகிறது. இதுகுறித்து பணிமனை அலுவலர்களிடம் கேட்டால் ஆட்கள் தட்டுப்பாடு இருப்பதால் பேருந்துகளை முறையாக இயக்குவதில்லை என்று பதில் அளிக்கப்படுகிறது. போதிய அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் ராதாபுரத்தில் மணிக்கணக்கில் பயணிகள் காத்திருந்து அவதியுறுகிறார்கள்.
இது குறித்து பிரகாசபுரத்தை சேர்ந்த ரோஸ்லின் கூறும்போது, ‘‘திசையன்விளை ஊரில் இருந்து வரக்கூடிய பேருந்து சரியாக வருவதில்லை . இதனால் வெளிஇடங்களுக்கு செல்ல முடியவில்லை . ஆட்டோ அல்லது டிரக்கரில் அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டியுள்ளது’’ என்றார்.
இப்பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துநர் முத்துசாமி கூறும்போது, ‘‘அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் என்றால் காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும் . அப்படி செய்தால் மட்டும்தான் அனைத்து பேருந்துகளும் முறையாக இயக்க முடியும். எனவே அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியான பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
ராதாபுரத்தை சேர்ந்த காமராஜ் கூறும்போது, ‘‘வள்ளியூர் , கன்னியாகுமரி ஆகிய பணிமனைகளில் இருந்து 20 பேருந்துகள் ராதாபுரத்துக்கு இயக்கப்பட்டு வந்தது. தற்போது இலவச பேருந்துகள் இயக்கப்படுவதால் வருவாய் இல்லை என்று கூறி முறையாக பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. மேலும் இரவு நேரங்களிலும், ஞாயிற்றுகிழமைகளிலும் 10 -க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இது குறித்து புகார் தெரிவிக்க பணிமனை மேலாளர்களை தொடர்பு கொண்டால் அவர்கள் போனை எடுப்பதில்லை என்றார்.
ராதாபுரத்தை சுற்றியுள்ள 50 கிராமங்களை உள்ளடக்கிய பொதுமக்கள் பயன்பெறும் வண்ணம் போதிய பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT