

சமுதாய வளர்ச்சிக்கு சேவை புரியும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’ என்ற புதிய விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப்பேரவையில் புதன்கிழமை பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து கூறியதாவது:
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’ என்ற புதிய விருது உருவாக்கப்படும். 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று இந்த விருது வழங்கப்படும். இது ரூ.50 ஆயிரம், பாராட்டுப் பத்திரம், பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.
திருச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் முக்கிய புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தலா ரூ.80 லட்சமும் பிற மாவட்ட விளையாட்டு வளாகங்களில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள ரூ.80 லட்சமும் என மொத்தம் ரூ.4 கோடி ஒதுக்கப்படும்.
மேலும் 23 மாவட்டங்களில் உள்ள 25 நீச்சல் குளங்கள் ரூ.3 கோடியில் புனரமைக்கப்பட்டு, புதுப்பித்து பராமரிக்கப்படும். சென்னை வேளச்சேரி, செனாய் நகர் மற்றும் மதுரை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள நீச்சல் குளங்களில் நிறுவப்பட்டுள்ள வடிகட்டும் நிலையங்களை மாற்றி, தலா ரூ.15 லட்சம் வீதம் ரூ.75 லட்சத்தில் ஓசோன் சுத்திகரிப்புடன் கூடிய புதிய வடிகட்டும் நிலையங்கள் அமைக்கப்படும்.
சென்னை அருகே மேலக்கோட்டையூரில் உள்ள விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பயன்பாட்டுக்காக உலகத் தரம் வாய்ந்த வசதிகளை அளிக்கும் வகையில் ரூ.18.3 கோடியில் நூலக அறை, ஆய்வுக்கூடம், கூட்ட அரங்கம், பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் ஆகியவை அமைக்கப்படும்.
மாநிலத்துக்கென தனியாக இளைஞர் கொள்கை வகுக்கப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.