Published : 07 Oct 2017 11:59 AM
Last Updated : 07 Oct 2017 11:59 AM

ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க ஆவன செய்க: ஆளுநரிடம் விஜயகாந்த் நேரில் கோரிக்கை

தமிழகத்தில் தற்போது நிலவும் ஸ்திரத்தன்மை இல்லாத ஆட்சியை சட்ட சபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆவன செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து சனிக்கிழமை விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

1. தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றதற்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

2. ஒரு வருடத்திற்கும் மேலாக தமிழகத்திற்கு எந்த ஒரு புதிய திட்டங்களும், மக்கள் எதிர்பார்க்கும் எந்த பணிகளையும், ஆளும் அரசு சரிவர பணிகளை செய்யாமல் மக்களையும், நாட்டையும் வஞ்சித்து வருகிறது. இந்த நிலை மாற உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

3. தமிழகத்தை ஆட்டுவிக்கும் டெங்கு காய்ச்சல், சட்டம்- ஒழுங்கு, விவசாயிகள் பிரச்சினை, சாலைகள், சுகாதார சீர்கேடு, மற்றும் ரேஷன் பொருட்கள் உரிய நேரத்தில் சென்றடையாமல், உள்ளாட்சி அமைப்புகளே இல்லாத நிலையில், தமிழகம் முழுவதும் எந்த ஒரு சிறு பணிகள்கூட நடைபெறாமல் தமிழகம் முடங்கியுள்ளது. இந்த நிலையை மாற்றிட ஆவன செய்ய வேண்டும்.

4. ஆளும் கட்சியைச் சேர்ந்த அனைவரும் தங்கள் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதிலும், அதன் மூலம் தங்கள் சுயலாபம் அடைவதில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டு இருக்கிறார்களே தவிர, மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் தான்தோன்றித் தனமாக இருப்பதை மக்கள் யாரும் விரும்பவில்லை. இதற்காக உரிய தீர்வை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு நடுநிலையோடு இருந்து நல்ல தீர்வை நீங்கள் தரவேண்டும்.

5. நீங்கள் பதவி ஏற்ற போது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடுநிலையோடு இருந்து அரசுப் பணிகளை செய்வேன் என்று நீங்கள் கூறியபடி, தமிழகத்தில் தற்போது நிலவும் ஸ்திரத்தன்மை இல்லாத ஆட்சியை சட்ட சபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x