

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடந்த உணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் எ.வ.வேலு பேசும்போது, மண்ணெண்ணெய் விநியோகம் பற்றி குறிப்பிட்டார்.
அப்போது அமைச்சர் காமராஜ் குறுக்கிட்டுப் பேசியதாவது:
கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரலில் தமிழகத்துக்கு 52,806 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை மத்திய அரசு ஒதுக்கியது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 29,060 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தின் தேவை 65,140 கிலோ லிட்டராகும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டு அளவு 10 முறை குறைக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த திமுகவைச் சேர்ந்த பலர் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். தமிழகத்துக்கு தேவையான அளவு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யுமாறு அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தவில்லை. தொடர்ந்து முயற்சி செய்யவும் இல்லை.