Published : 30 Oct 2017 09:56 AM
Last Updated : 30 Oct 2017 09:56 AM

பசும்பொன்னில் இன்று தேவர் குரு பூஜை விழா: பாதுகாப்புப் பணியில் 8 ஆயிரம் போலீஸார்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையை முன்னிட்டு 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், கண்காணிப்புக்காக கேமராக்கள் பொருத்தப்பட்ட ஆளில்லா உளவு விமானங்களை இயக்கி சோதனை மேற்கொண்டனர்.

கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜை விழா இன்று (அக்.30) நடைபெறுகிறது. விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சியினர், சமுதாயத் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

விழாவை முன்னிட்டு சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபி விஜயகுமார் தலைமையில் தென்மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ் மற்றும் 3 ஐஜிக்கள், 4 டிஐஜிக்கள், 16 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 8 ஆயிரம் போலீஸார் பசும்பொன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தவறு செய்வோர், பிரச்சினைகளில் ஈடுபடுவோரை வானில் இருந்து கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்ட ஆளில்லா உளவு விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த விமானங்களை நேற்று பசும்பொன்னில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா இயக்கி சோதனை செய்தார். அதன் பின்னர் வானில் பறக்கவிட்டு சோதனை ஓட்டமும் நடைபெற்றது.

மேலும் தென் மண்டலத்துக்கு உட்பட்ட வெடிகுண்டு துப்பறியும் 20 மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பசும்பொன், கமுதி, அபிராமம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

300 கண்காணிப்பு கேமராக்கள்

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தேவர் குருபூஜைக்காக பசும்பொன் மற்றும் மாவட்டம் முழுவதும் 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும், ஆளில்லாத உளவு விமானங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இதன்மூலம் தவறு செய்பவர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்சினைகள் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கும் வகையில், வழக்கத்தைவிட பசும்பொன்னில் அதிகளவில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x