Published : 29 Oct 2017 10:17 AM
Last Updated : 29 Oct 2017 10:17 AM

பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் நவம்பர் 8-ல் ஆர்ப்பாட்டம்: கண்டன தினமாக கடைபிடிப்பதாக தலைவர்கள் கூட்டாக அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், சிபிஐ (மாலெ-லிபரேசன்) மாநில செயலாளர் எஸ்.குமாரசாமி, எஸ்யுசிஐ(சி) மாநில செயலாளர் ஏ.ரெங்கசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்கம் இந்திய பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதித்துள்ளது. மொத்தத்தில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை படுதோல்வி அடைந்துள்ளது. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மூன்றாவது முக்கியப் பங்களிப்பு செலுத்துகிற முறைசாரா தொழில் அடியோடு அழிக்கப்படுகிறது.

பொருளாதாரத்தை முற்றிலும் நிலைகுலையச் செய்யும் அடுத்த நடவடிக்கையாக ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனவேதான் இடதுசாரிக் கட்சிகள் இந்திய நாடுமுழுவதும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதியை கண்டன தினமாக கடைபிடிப்பது என டெல்லியில் கூடிய 6 இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் இந்த கண்டன தினத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடதுசாரி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நவம்பர் 8-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலை நேர தர்ணா நடத்த வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து பகுதி மக்களும் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x