Published : 07 Jun 2023 10:22 PM
Last Updated : 07 Jun 2023 10:22 PM
சென்னை: "குடியரசுத் தலைவர் ஒரு பெண். அவர் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அதையும் தாண்டி, அவர் கணவரை இழந்த விதவை என்ற காரணத்தாலும், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை திறக்கக்கூடாது என்பது மட்டுமல்ல, அந்த இடத்திற்கு அவர் வருவது அபசகுணம் என்ற காரணத்தால் அவர் அழைக்கப்படவில்லை" என்று இந்திய கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
திமுக தலைவராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, அவரது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி தொடங்கியது. இதற்காக அரசு சார்பிலும் திமுக தரப்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக துக்கம் அனுசரிக்கப்பட்டதால், ஒரு சில நிகழ்வுகள் தவிர மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், புதன்கிழமை மாலை நடைபெற்றது. பின்னி மில் வளாகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த கி.வீரமணி,கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், கே.எம்.காதர்மொய்தீன், திருமாவளவன், எம்.எச்.ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், தி.வேல்முருகன் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
இதில் முத்தரசன் பேசியது: "மே 28 என்பது இந்த தேசத்தின் சுதந்திரத்துக்கு எதிராக இருந்த ஒருவர், தேசப்பிதா மகாத்மா காந்தியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய நபர்களில் ஒருவர் வீரசாவர்க்கர் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை திறக்க தேதி தீர்மானிக்கப்படுகிறது. திமுக, காங்கிரஸ் உட்பட முக்கிய எதிர்க்கட்சிகள் சேர்ந்து அந்த கட்டிடத்தை குடியரசுத் தலைவரைக் கொண்டு திறந்துவைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. அதற்கு எந்த பதிலும் வரவில்லை.
140 கோடி மக்களில், முதல் குடிமகன் குடியரசுத் தலைவர். அவரைக் கொண்டு புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதற்கு என்ன காரணம்? மநுதர்மத்தை முழுமையாக பின்பற்றுகிற காரணத்தாலும், குடியரசுத் தலைவர் ஒரு பெண் என்கிற காரணத்தாலும், அவர் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் நிராகரிக்கப்பட்டது. அதையும்தாண்டி, அவர் கணவரை இழந்த விதவை என்ற காரணத்தாலும், அந்த கட்டிடத்தை திறக்கக்கூடாது என்பது மட்டுமல்ல, அந்த இடத்திற்கு அவர் வருவது அபசகுணம் என்ற காரணத்தால் அவர் அழைக்கப்படவில்லை.
ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு மகாபாரதத்தின் மீது நம்பிக்கை உண்டு. நம்பிக்கை மட்டுமல்ல, அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தக்கூடியவர்கள். மகாபாரத கதையில், திரௌபதி துச்சாதனால் துகிலுரியப்பட்டாள் என்று கூறுவார்கள். இன்றைக்கு இருக்கக்கூடிய துச்சாதனர்கள் அதே காரியத்தைத்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், பெரியார், அண்ணா, கருணாநிதியின் வழிவந்த தமிழக முதல்வர், கிண்டியில் திறக்கப்படவுள்ள மிகப்பெரிய பிரமாண்டமான மருத்துவமனையை அவர்கள் அவமதித்த பெண்ணைக் கொண்டு திறக்கப்போகிறேன் என்று அறிவித்து, அவரையும் நேரில் சென்று அழைத்துள்ளார்" என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT