

சேலம்: தமிழக முதல்வர் மேட்டூர் அணை திறக்க வருவதையொட்டி, மேட்டூர் பகுதி புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது.
சேலம் மாவட்டதில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்க விழா, காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடும் நிகழ்ச்சி என 2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் வரும் 11-ம் தேதி சேலம் வருகிறார். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 12-ம் தேதி தண்ணீர் திறந்து வைக்கிறார். அப்போது, மேட்டூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
சேலத்தில் இருந்து சாலை மார்கமாக வரும் முதல்வர், மேட்டூர் அணையை திறந்து வைத்து, அதிகாரிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரமணாக, மேச்சேரி - மேட்டூர் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குண்டு குழியுமான சாலைகள் சீரமைப்பு பணி, சாலையோரம் உள்ள புற்கள் அகற்றும் பணி உள்ளிட்டவை விறு விறுப்பாக நடந்து வருகிறது. மேலும், காவிரி ஆற்றின் நடுவே உள்ள புதுப்பாலம், சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர்கள் உள்ளிட்டவை புதுப்பிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
அதேபோல், தடுப்பு சுவரியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றும் பணியும் நடந்த வருகிறது. மேட்டூருக்கு முதல்வர் வருகையையொட்டி, போக்குவரத்து, பாதுகாப்பு குறித்தும் போலீஸார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.