

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரக்கன்று நட்டு புதன்கிழமை (ஜூன் 7) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வு சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடந்தது.
"மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்" என்ற கருணாநிதியின் சொல்லுக்கு இணங்க, அவரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என்றும் 2023-2024ம் ஆண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்புக்கு இணங்க, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நாளான இன்று (7.6.2023) தமிழக முதல்வர், சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
இன்றைய தினம் தமிழகமெங்கும் நெடுஞ்சாலை துறையின் 340 சாலைகளில் நடப்படவுள்ள மகிழம், வேம்பு, புளியன், புங்கன், நாவல், சரக்கொன்றை போன்ற வகையைச் சார்ந்த சுமார் 46,410 மரக்கன்றுகள், 24 மாத காலம் வளர்ச்சிக் கொண்டவையாகும். மேலும், பருவமழைக்கு முன்பாகவே 5 லட்சம் மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் அண்ணாதுரை, நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு தலைமைப்பொறியாளர் இரா. சந்திரசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.