கரூரில் மாயமான 16 வயது மாணவி சடலமாக மீட்பு: மறு பிரேத பரிசோதனைக்கு ஐகோர்ட் உத்தரவு

கரூரில் மாயமான 16 வயது மாணவி சடலமாக மீட்பு: மறு பிரேத பரிசோதனைக்கு ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: கரூரில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட 16 வயது மாணவியின் உடலை நாளை (ஜூன் 8) மறு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் சவரிமேடு கிராமத்தைச் சேர்ந்த கலைவாணி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''என் 16 வயது மகள் மே 25-ல் மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் அவர் கிணற்றில் சடலமாக கிடந்தார். என் மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் திருச்சி அரசு மருத்துவமனையில் மகளின் உடலுக்கு முறையாக பிரேத பரிசோதனை நடத்தப்படவில்லை. எனவே, மகளின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் மகள் பிரோத பரிசோதனை சிசிடிவி பதிவுகளை மனுதாரருக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் மனுதாரருக்கு வீடியோ பதிவு வழங்கப்படவில்லை. இதனால் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில், ''மனுதாரரின் மகளின் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என போலீஸார் தரப்பில் விண்ணப்பம் அளிக்கவில்லை. எனவே வீடியோ பதிவு செய்யவி்ல்லை'' என்றார்.

மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், ''மாணவி இறப்பதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதனால் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். 10 நாளாக உடல் பிரேத பரிசோதனை கிடங்கில் தான் உள்ளது'' என்றார்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''போலீஸார் 3 பேரை கைது செய்துள்ளனர். விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது'' என்றார்.

இதையடுத்து நீதிபதி, ''மனுதாரரின் மகள் உடலை நாளை (ஜூன் 8) பகல் 12.30 மணியளவில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும். மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மறு பிரேத பரிசோதனை முடிந்ததும் மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொள்ள வேண்டும்'' என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in