Last Updated : 07 Jun, 2023 04:35 PM

34  

Published : 07 Jun 2023 04:35 PM
Last Updated : 07 Jun 2023 04:35 PM

பட்டியலின மக்களை அனுமதிக்காத விழுப்புரம் - திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல்; கிராமத்தில் வெளி ஆட்கள் நுழைய தடை

விழுப்புரம்: பட்டியலினத்தவரை அனுமதிக்காத விழுப்புரம் - திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெளி ஆட்கள் கிராமத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான தர்மா ராஜா திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பட்டியலின மக்கள் கடந்த மாதம் 7-ம் தேதி மாலை தேர்த் திருவிழாவின்போது கோயிலுக்கு சென்றுள்ளனர். இதனால், பட்டியலின மக்கள் மீது ஒரு தரப்பினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அன்று இரவு விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலையில் பட்டியலின மக்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வளவனூர் காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டனர்.

சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்து வரும் பிரச்சினை தொடர்பாக விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் 5 முறை அமைதிக் கூட்டம் போடப்பட்டும் சுமூகத் தீர்வு ஏற்படவில்லை. அதனைத் தொடர்ந்து ஆட்சியர் பழனி தலைமையில் எம்.பி மற்றும் எம்எல்ஏ-க்கள் முன்னிலையில் இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து பேசியபோதும் அமைதிக் கூட்டத்தில் சுமூகத் தீர்வு ஏற்படவில்லை. ஒரு தரப்பினர் கோயிலுக்குள் நுழைய விடமாட்டோம் என்று கூறி அறவழிப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி தலைமையில் கடந்த வாரம் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரவிக்குமார் எம்.பி தலைமையில் ஆட்சியர், எஸ்பியிடம் மனுவாக அளித்திருந்தனர். அதில், ‘பொது இடத்தில் நுழைவதை யாரும் தடுக்க முடியாது. எவர் ஒருவரையும் பொது இடத்தில் நுழைய விடாமல் தடுப்பது சட்டப்படி குற்றமாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 15-ல் அது தெளிவாக்கப்பட்டுள்ளது. அதுபோலவே அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 17 தீண்டாமையைக் கடைப்பிடிப்பதைக் குற்றம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து திருக்கோயில்களிலும் இந்துக்கள் அனைவரும் தடையின்றி வழிபடுவதை உறுதி செய்துள்ளது. மேல்பாதி கோயில் பிரச்சினையில் சமத்தவத்தை நிலைநாட்டுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்திடவும், இல்லையென்றால் அனைத்துக் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மேல்பாதி கோயில் விவகாரத்தில் இரு தரப்பினருக்கிடையே சுமூக தீர்வு ஏற்படாத நிலையில், கோயிலை பூட்டி சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்காக 700 போலீஸார் அக்கிராமத்தில் குவிக்கப்பட்டனர். அதன்படி இன்று காலை 6 மணிக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் கோயிலை பூட்டி சீல் வைத்துள்ளார். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால், கிராமத்துக்குள் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டத்தில் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய கிராமங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக விக்கிரவாண்டி முதல் கோலியனூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், வெளி மாவட்ட போலீஸார் என மாவட்ட நிர்வாகம் திடிரென ஏற்படும் அசம்பாவிதங்களை சமாளிக்க தயார் நிலையில் இருந்தது.

இருதரப்பினரும் விசாரணைக்கு ஆஜராக ஆட்சியர் உத்தரவு: இது தொடர்பாக விழுப்புரம் ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வது தொடர்பாக இரு தரப்பினர்களிடையே கடந்த ஏப்ரல் 7-ம் தேதி ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக, இரு தரப்பினர்களிடையேயும் கோட்டாட்சியர், ஆட்சியரால் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் சுமுகமான தீர்வு ஏற்படவில்லை.

எனவே, கோயில் வழிபாட்டில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுவதாலும், இதனால் பொது அமைதியை பாதுகாத்திடும் வகையில் ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கக் கூடாத என தீர்மானித்து குற்றவியல் முறை சட்டப்பிரிவு 145-ன் கீழ் வருவாய் கோட்டாட்சியரால் விளம்புகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக கோயில் மூடி சீலிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரும் நாளை மறுநாள் (ஜூன் 9) காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகி தங்கள் தரப்பு எழுத்துபூர்வமான விளக்கத்தினை உரிய ஆவணங்களுடன் அளித்துக் கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 2-ம் கட்ட விசாரணை செய்யப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x