மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்த திமுக எம்பி
மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்த திமுக எம்பி

இந்து பழங்குடியின பெண்களுக்கு சொத்துரிமை: பரிசீலனை செய்வதாக திமுக எம்.பி கோரிக்கைக்கு மத்திய அரசு பதில்

Published on

சென்னை: இந்து பழங்குடியின பெண்கள் சொத்தில் சமபங்கினைப் பெறுவதற்கான உரிமைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று திமுக எம்.பி கோரிக்கைக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்து மதத்தைப் பின்பற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு சொத்துக்களின் மீது சமமான பங்குகளைப் பெறுவதற்கு ஏதுவாக, இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் நன்மை பயக்கும் விதிகளைப் பயன்படுத்துமாறு மத்திய அமைச்சர்களை கழக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், குடியரசுத் தலைவரை சந்தித்தபோதும் இதுகுறித்து கோரிக்கை வைத்தார். குடியரசுத் தலைவர், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அக்கடிதத்தை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து பதில் எழுதியுள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இந்த விவகாரம் தொடர்பாக பழங்குடியினர் விவகாரத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சமூக நீதித் துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை ஆகியவற்றின் அமைச்சர்களோடு கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும்,

மேலும், இந்த விவகாரம் அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் பிரிவு III-ன் படி மாநிலப்பட்டியலில் வருவதால் மாநில அரசுகளுடனும் கலந்தாலோசனை தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்து பழங்குடியின பெண்கள் சொத்தில் சமபங்கினைப் பெறுவதற்கான உரிமைகள் பரிசீலிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பதை மகத்தான வெற்றியாக கருதுவதாகவும், பழங்குடியின மகளிருக்கு சம உரிமைகளை வழங்கும் வகையில், அனைத்து தரப்பினராலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் வில்சன் கூறியுள்ளார்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in