சமூக வலைதளங்களில் பதிவிட்ட மீனாட்சியம்மன் கோயில் படங்களை நீக்க முடியாது - உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

சமூக வலைதளங்களில் பதிவிட்ட மீனாட்சியம்மன் கோயில் படங்களை நீக்க முடியாது - உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
Updated on
1 min read

மதுரை: சமூக வலைதளங்களிலிருந்து மீனாட்சியம்மன் கோயில் புகைப்படம், வீடியோக்களை நீக்க வேண்டும் என உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மதுரை புதூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் மொபைல் போன், கேமராக்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் சிலைகள், சிற்பங்களை புகைப்படங்கள் எடுக்க அனுமதியில்லை. ஆனால், மதுரையைச் சேர்ந்த சில தனியார் புகைப்பட நிறுவனங்கள் மீனாட்சியம்மன் கோயில் சிற்பங்கள், சிலைகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்து தங்களின் முத்திரையுடன் முகநூல், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இந்த நிறுவனங்களுக்கு மீனாட்சியம்மன் கோயிலில் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதி உள்ளதா? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டதற்கு, அனுமதி இல்லை என பதில் அளிக்கப்பட்டது. இதனால், மீனாட்சியம்மன் கோயிலில் அனுமதியில்லாமல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கவும், கோயிலுக்குள் தனிநபர்கள் புகைப்படம், வீடியோ எடுக்காமல் இருக்கும் வகையில் பாதுகாப்பை அதிகரிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. கோயில் நிர்வாகம் சார்பில், கோயிலுக்குள் புகைப்படம், வீடியோ எடுக்க ஒப்பந்தம் கோரப்பட்டு, அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in