

சென்னை: ‘தி இந்து’ குழும பதிப்பக நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவர் பதவியில் நிர்மலா லக்ஷ்மண் ஒருமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 3 ஆண்டு காலம் இப்பதவியில் இருப்பார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாலினி பார்த்தசாரதியின் 3 ஆண்டு பதவிக்காலம் நிறைவு பெறுவதையொட்டி நேற்று முன்தினம் (ஜூன் 5) நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் அவர் பதவி விலகினார். இதையடுத்து,அவரது பொறுப்புக்கு நிர்மலா லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டு காலத்துக்கு இப்பதவியில் இருப்பார்.
நிர்மலா லக்ஷ்மண் பின்நவீனத்துவ இலக்கியத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளதுடன் ஆசிரியர், எழுத்தாளர் பணி மற்றும் ‘தி இந்து’வின் பல்வேறு வெளியீடுகளுக்கான திட்டமிடலில் 40 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றவர். ‘தி இந்து’ நாளிதழின் இணை ஆசிரியராக அவர் பல்வேறு சிறப்பு பகுதிகளின் மறுவெளியீட்டுக்கு வழிவகுத்ததுடன் புதிய சிறப்பிதழ்களான ‘தி இந்து லிட்டரரி ரிவ்யூ’, ‘யங் வேர்ல்டு’, ‘தி இந்து இன் ஸ்கூல்’ உள்ளிட்டவற்றை உருவாக்கிய பணிக்கு தலைமை ஏற்றவர்.
‘தி இந்து’வின் ‘லிட் ஃபார்லைஃப்’ இலக்கிய திருவிழாவை உருவாக்கியவர் மற்றும் அதற்கான ஏற்பாட்டாளர் என்ற பெருமைக்கும் உரியவர்.
‘இந்து தமிழ் திசை’யை பதிப்பிக்கும் கஸ்தூரி அண்டு சன்ஸ்மீடியா லிமிடெட் (கேஎம்எல்) நிறுவனத்தின் தலைவராகவும் நிர்மலா லக்ஷ்மண் பொறுப்பு வகித்துள்ளார்.
‘தி இந்து’ குழுமத்துக்கு மாலினி பார்த்தசாரதி அளித்துள்ள பங்களிப்பையும், அவர் நிர்வாகக் குழுவை திறம்பட வழிநடத்தி, கருத்துகளை எடுத்துரைத்த பணியையும் மனமார பாராட்டுகிறோம். நிர்மலா லக்ஷ்மண், தற்போது ஏற்றுள்ள தலைவர் பதவிக்கான பொறுப்புகளை தனது கல்வியறிவு மற்றும் அனுபவத்தின் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றுவார் என உறுதியாக நம்புகிறோம் என்று ‘தி இந்து’குழும பதிப்பக நிறுவனத்தின் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ‘தி இந்து’ குழும பதிப்பக நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிர்மலா லக்ஷ்மணுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘தி இந்து குழும வெளியீடுகளின் இயக்குநர்கள் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா லக்ஷ்மணுக்கு எனது நல்வாழ்த்துகள். அவரது சிறப்பான கல்வித் தகுதி, செய்தித்தாள் ஆசிரியர் அனுபவம் மூலம், புதிய பொறுப்பிலும் சிறப்பாக பணியாற்றுவார் என நம்புகிறேன்’ என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இலக்கியம், இதழியல் ஆகியவற்றுக்கு அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கிய நிலையில், இந்த நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. அவரது புதிய பொறுப்புமற்றும் வருங்கால முயற்சிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.