

உடுமலை: நூறாண்டுகள் பழமையான உடுமலை நகராட்சி 33 வார்டுகளை கொண்டது. சுமார் 1 லட்சம் பேர் வசிக்கின்றனர். உடுமலை குட்டைத்திடல், ராஜேந்திரா சாலை, சத்திரம் வீதி, பழநி சாலை, தளி சாலை நகராட்சி வணிக வளாகம், மத்திய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான 273 கடைகள், ராஜேந்திரா சாலையில் 7.4 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள தினசரி மற்றும் வார சந்தை ஆகியவற்றின் மூலம் பெறப்படும் குத்தகை வருவாய் ஆண்டுக்கு ரூ.2 கோடியாக உள்ளது.
இது தவிர குடிநீர், சொத்துவரி, தொழில் வரி, கட்டிட அனுமதி உள்ளிட்ட வகையில் நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நகராட்சிக்கு சொந்தமான சந்தை மூலம் அரசுக்கு வர வேண்டிய வருவாய் தனியாரால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை வசூலிக்க அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘உடுமலை நகராட்சியில் கடந்த சில ஆண்டுகளில் நிர்வாக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன. அரசுக்கு வர வேண்டிய வருவாயை, ஊழியர் ஒருவர் தனது வங்கி கணக்கிலும், மனைவி மற்றும் உறவினர்கள் வங்கி கணக்கிலும் வரவு வைத்த வகையில் ரூ.17 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது. இது தணிக்கை அறிக்கையிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதேபோல நகராட்சிக்கு சொந்தமான சந்தை ரூ.1 கோடியே 5 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை ரூ.40 லட்சம் மட்டுமே வரவாகியுள்ளது. எஞ்சிய தொகை பல மாதங்கள் ஆகியும் வசூலிக்கப்படாமல் உள்ளது. அதே வார சந்தையில் தனியாரால் அரசு அனுமதியின்றி, விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் தனியாருக்கு லாபமாக செல்கிறது. இது முறைப்படி நகராட்சிக்கு வர வேண்டிய வருவாய்.
இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் நகர் மன்றம் இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இதுகுறித்து நகர வருவாய் அலுவலர்கலீல் கூறும்போது, ‘‘சந்தை ஏலம் மூலம் அரசுக்கு வர வேண்டிய ரூ.60 லட்சத்தை கேட்டுபலமுறை நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதத்துக்குள்செலுத்தாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.