

அரூர்: மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நேற்று நடைபெற்றது.
அரூர் ஒன்றியம் சிட்டிலிங் ஊராட்சி பகுதியில் பழங்குடி சமூகத்தினரின் நிலங்களை ஆதிக்க சாதியினர் அபகரித்துள்ளதை அகற்றி பாதிக்கப் பட்ட பழங்குடியின மக்களின் நிலங்களை மீட்டு தர வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டி அருகே நொனங்கனூர் கிராம பழங்குடியின மக்கள் காலங்காலமாக பயன்படுத்தும் சுடுகாட்டுப் பாதை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்டுத் தரவேண்டும். பழங்குடியின மக்கள் மீது கோட்டப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினரால் போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்.
ஆலாமரத்தூர் சுடுகாடு 20 ஆண்டு காலமாக மக்கள் பயன்படுத்தி வருவதை அரசுஉறுதிப்படுத்த வேண்டும். 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் படி நிலப் பட்டா, வீட்டு மனை பட்டா, பழங்குடியின சாதிச்சான்று வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஏ.அன்புரோஸ் தலைமை வகித்தார்.
மாநில தலைவர் பி.டில்லி பாபு சிறப்புரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் ஏ.கண்ணகி, மாவட்ட செயலாளர் கே.என்.மல்லையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ.அர்ச்சுனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஏ.குமார், ஒன்றிய செயலாளர்கள் அரூர் பி.குமார், பாப்பிரெட்டிப்பட்டி தனுசன் உள்ளிட்ட பலர் பேசினர்.
சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு பேசும்போது, சிட்லிங், சித்தேரி ஆகிய மலைக்கிராமங்களில் உள்ள பழங்குடி மக்களின் 500 ஏக்கர்நிலத்தை பழங்குடி அல்லாதோர் மிரட்டி வாங்கியுள்ளனர். இந்த நிலத்திற்கான பட்டாவும் பெற்றுள் ளனர். நிலப்பதிவும் செய்துள்ளனர். பழங்குடியினர் நிலத்தை பழங்குடி அல்லாதோர் வாங்கினால் செல்லாது என 1979-ம் ஆண்டு மார்ச் 14 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழங்குடி அல்லாதோர் பெயரில் நிலம் எப்படி பதிவு செய்யப்பட்டது? சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை பதிவு செய்ய வருவாய்த் துறை அதிகாரிகள் துணையுடன் நிலத்தை அபகரித்துள்ளனர். எனவே பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.