Published : 07 Jun 2023 04:10 AM
Last Updated : 07 Jun 2023 04:10 AM
ஓசூர்: சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஓசூர் அருகே உத்தனப்பள்ளியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 3 பேர் நேற்று மயங்கி விழுந்தனர்.
ஓசூர் அருகே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் நிலப்பரப்பில் 5-வது சிப்காட் அமைக்க விளைநிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தனப்பள்ளி வருவாய்த் துறை ஆய்வாளர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் 152-வது நாளான நேற்று முன்தினம் முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதனிடையே, அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று, விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்வதோடு, 20 விவசாயிகள் மட்டும் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தை தொடர்ந்தனர்.
நேற்று 153-வது நாளாகக் காத்திருப்புப் போராட்டமும், 2-வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமும் நடந்தது. இதில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வெங்கட ரமணப்பா, அன்னை யப்பா, பால கிருஷ்ணா ஆகிய 3 விவசாயிகள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து, அங்கு தயார் நிலையிலிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் 3 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக விவசாயி சத்திய நாராயணா என்பவர் கூறும்போது, காத்திருப்பு போராட்டத்தில் 142 நாட்கள் ஈடுபட்ட விவசாயி அன்னையா (60) என்பவர் தனது நிலம் பறிபோகும் என்ற மனவேதனையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தது வேதனையாக உள்ளது. எங்கள் கோரிக்கையை நிறை வேற்ற முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT