

சேலம்: சேலத்தின் முக்கிய பொழுதுபோக்கு இடமான அண்ணா பூங்காவுக்கு குழந்தைகளுடன் வருபவர்கள், பேருந்து நிறுத்தத்துக்கு செல்ல நடைபாதை வசதி இல்லாததால், விபத்து அச்சத்துடன் சாலையை கடக்கும் நிலை உள்ளது. எனவே, சாலையைக் கடக்க வசதியும், நிழற்கூடமும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாக இருக்கும் சேலத்தில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடமாக அண்ணா பூங்கா இருக்கிறது. இங்கு, தினமும் மாலையில் நூற்றுக்கணக்கானவர்களும், விடுமுறை நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் - பழைய பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு நடுவில், போக்குவரத்து வசதியுடன் இருப்பதால், சேலம் மாநகர மக்கள் மட்டுமல்லாது, சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்தவர்களும் வார விடுமுறை நாட்களில் குழந்தைகளை அண்ணா பூங்காவுக்கு அழைத்து வருகின்றனர். பூங்கா அருகே குடியிருப்புகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவையும் இருப்பதால், பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த இடமாக இருக்கிறது.
இந்நிலையில், அண்ணா பூங்கா பகுதிக்கு வந்து செல்பவர்களுக்கு, சாலையைக் கடக்க நடைபாதை வசதி இல்லாததால், அவர்கள் அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு இடையே ஆபத்தான முறையில் சாலையைக் கடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. இதனால், குழந்தைகளுடன் அண்ணா பூங்காவுக்கு வருபவர்கள், அச்சத்துடனேயே வருகின்றனர்.
இதுகுறித்து பூங்காவுக்கு குழந்தைகளுடன் வந்து செல்லும் பெற்றோர் கூறியது: குழந்தைகள் அதிகம் விரும்பும் இடமாக அண்ணா பூங்கா இருக்கிறது. எனவே, மாலையிலும், வார விடுமுறை நாட்களிலும் குழந்தைகளை அழைத்து வருகிறோம். பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பதால், எங்களுக்கும் இங்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், பூங்காவுக்கு பேருந்தில் வரும்போது, சாலையின் ஒருபுறத்தில் இருந்து, மறுபுறம் கடந்து செல்வதற்கு, நடைபாதை வசதி இல்லை.
சாலையின் இருபுறமும் பேருந்து நிறுத்தங்கள் செயல்படும் நிலையில், சாலையின் மையத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, அதிவேகமாக வாகனங்கள் சென்று வரும்போதே, சாலையின் குறுக்கே நடந்து, மையத்தில் உள்ள சாலைத்தடுப்புகளுக்குள் ஆபத்தான நிலையில் புகுந்து, மறுபுறம் செல்ல வேண்டியுள்ளது.
இது பெரியவர்களுக்கே சிரமமாக இருக்கும் நிலையில், குழந்தைகளோடு வரும்போது, சாலையைக் கடந்து மறுபுறம் செல்வது, மிகவும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இதேபோல், இரு சக்கர வாகனங்களில் அண்ணா பூங்கா பகுதிக்கு வருபவர்கள், சாலையின் எதிர் திசையில் பெரியார் மேம்பாலம் வரை பயணித்து, சாலைத் தடுப்புகளை கடந்து, பின்னர் மறு சாலையில் புகுந்து, அண்ணா பூங்கா பகுதிக்கு வருகின்றனர். இதன் காரணமாகவும் இந்த இடம் விபத்து அபாயமுள்ள பகுதியாக இருக்கிறது.
எனவே, அண்ணா பூங்கா அருகே சாலையில் நடைபாதை வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும், பேருந்து நிழற்கூடமும் அமைக்க வேண்டும். இரு சக்கர வாகனங்கள் கடந்து செல்லவும் வசதி ஏற்படுத்தினால், சாலையின் எதிர் திசையில் பயணிப்பவர்களையும் தடுக்க முடியும். சேலம் மாநகராட்சி மற்றும் மாநகர காவல்துறை இணைந்து, மக்களுக்கான வசதியை ஏற்படுத்த வேண்டும், என்றனர்.