

சென்னை: சென்னையில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி, முற்றுகை போராட்டங்கள் நடத்துவதற்கு நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம், சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை உட்பட பல்வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முக்கிய இடமாக இருப்பது சைதாப்பேட்டை பனகல் மாளிகை பகுதி மற்றும் அருகே உள்ள சின்னமலை சந்திப்பு.
சென்னையின் மையப் பகுதியாகவும், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்துசெல்லும் அண்ணா சாலையிலேயே இப்பகுதிகள் அமைந்துள்ளதாலும், பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அரசியல் கட்சிகள், சங்கங்கள், அமைப்புகள் தங்களது போராட்டங்களை நடத்த பெரும்பாலும் இந்த பகுதிகளையே தேர்வு செய்கின்றனர்.
இப்பகுதிகளில் 20-30 பேர் கூடினாலே நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்க, போராட்டங்களின்போது 100 முதல் 1,000-க்கும் மேற்பட்டோர் வரை கூடுகின்றனர். அவர்கள் தங்களது வாகனங்களையும் சாலையிலேயே நிறுத்திவிடுகின்றனர். இதுதவிர, பாதுகாப்புக்கு போலீஸார் குவிக்கப்பட்டு, காவல் துறையின் வாகனங்களும் சாலையில் நிறுத்தப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இவ்வாறு நெரிசலில் சிக்கி ரயிலை தவறவிட்டவர்கள் பலர். அதேபோல, நெரிசலில் ஆம்புலன்ஸ்கள் சிக்கிக் கொள்வதால்,சிகிச்சைக்காக நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
கடந்த மே 22-ம் தேதி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக அதிமுகவினர் சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு பேரணியாக சென்று,ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தனர். இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பங்கேற்றதால் அண்ணா சாலையின் இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அன்றைய தினம் 105 டிகிரி வெயில்சுட்டெரித்ததால், நெரிசலில் சிக்கியஇருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். ‘‘நெரிசலில் சிக்கியதால், குறிப்பிட்ட நேரத்தில் வரமுடியவில்லை’’ என்று, பேரணியில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
சைதை பனகல் மாளிகை அருகே போராட்டம் நடைபெறும்‘கருணாநிதி பொன் விழா வளைவு’நுழைவு சாலையான ஜீனீஸ் சாலையில் சைதை அரசு புறநகர் மருத்துவமனை, மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை உள்ளன. இந்த2 மருத்துவமனைகளுக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.
போராட்டம் நடைபெறும் நாட்களில் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மருத்துவமனை அருகே ஒலிபெருக்கி வைத்து சத்தம் எழுப்ப கூடாது என்று விதிஉள்ளது. ஆனாலும், போராட்டக்காரர்கள் ஒலிபெருக்கிகளை வைத்து, அதிக சத்தம் எழுப்புவதால், மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோர் பாதிக்கப்படுகின்றனர். மேலும், போராட்டம் நடக்கும் நாட்களில், சைதாப்பேட்டை ரயில்நிலையம், மார்க்கெட் வந்து செல்வோர் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
எனவே, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகிலும், சின்னமலை சந்திப்பிலும் போராட்டங்கள் நடத்த யாருக்கும் அனுமதி வழங்க கூடாது என்று தமிழக அரசுக்கும், சென்னை காவல் துறைக்கும்வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுபற்றி வாகன ஓட்டிகள் குமார், மணி கூறியதாவது: சைதாப்பேட்டை, சின்னமலை போன்ற பொது போக்குவரத்து சாலைகளில் போராட்டம் நடத்த கண்டிப்பாக அனுமதி தரக்கூடாது. தடையை மீறியும், வாகன ஓட்டிகள்,பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது, ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து சென்னை காவல் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் சங்கரலிங்கத்திடம் கேட்டபோது, ‘‘சைதாப்பேட்டை பனகல்மாளிகை மற்றும் சின்னமலை பகுதிகளில் போராட்டம் நடத்த பெரும்பாலும் அனுமதி கொடுப்பதில்லை. சில நேரங்களில் தடையைமீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அந்த பகுதிகளில் போராட்டம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.