

விருத்தாசலம்: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் பகுதியில் ரூ.8.46 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட 800 மீட்டர் மேம்பாலப் பணிகள் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பாலப்பணி வழக்கு முடிந்து, போக்குவரத்து சீராவது எப்போது என கேள்வி எழுப்பும் வாகன ஓட்டிகள், அதுவரை சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்துவார்களா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட வேப்பூரில் பேருந்து நிலையம் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இப்பகுதியில் மேம்பாலம் கட்டினால் போக்குவரத்து சீராகி, விபத்து குறையும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதை பரிசீலித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ரூ.8.46 கோடி மதிப்பீட்டில் வேப்பூர் கூட்டு ரோடு முதல் சிறுநெசலூர் பாலம் வரை 1.25 கி.மீ நீளத்திற்கு பாலம் கட்ட முடிவு செய்து, அதற்கான அடிக்கல் நாட்டு விழாவை கடந்த 2019-ஜூலை 31 -ம் தேதி நடத்தியது. பணிகளைத் தொடங்கிய நிலையில், பாலம் 1.25 கி.மீ நீளத்திற்கு மாற்றாக 800 மீட்டர் வரையே பணிகளுக்கு கட்டுமானம் நடைபெற்றது.
இதையறிந்த அப்பகுதி சமூக ஆர்வலர் கதிர்வேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், ‘பாலத்தின் நீளத்தைக் குறைப்பதன் காரணம் என்ன?, பாலத்தின் நீளத்தைக் குறைக்கும்பட்சத்தில் சென்னை- திருச்சி செல்லும் கனரக வாகனங்கள் மேடு பள்ளம் என குறுகிய இடைவெளியில் ஏறி இறங்கி செல்ல முடியாது. விபத்துகள் ஏற்படும் என்பதால், வேப்பூர் கூட்டுரோடு முதல் சிறுநெசலூர் வரை பாலத்தை சம அளவில் கட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இதனால் பாலப் பணிகள் நிறுத்தப்பட்டு, கடந்த 2019 ஆகஸ்டு முதல் வேப்பூர் சர்வீஸ்சாலையிலேயே போக்குவரத்து மாற்றப்பட்டு, வாகனங்கள் பயணிக்கின்றன. இதனால் அப்பகுதியில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கனரக வாகனங்கள் போக்குவரத்தில் சிக்கித் தவிக்கின்றன.
மேலும் விடுமுறை நாட்களில் அதிக வாகனங்கள் பயணிப்பதாலும் போக்கு வரத்துக்கு தடை எற்பட்டு வேப்பூரை கடந்து செல்ல அரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் உருவாகிறது. இதனால் வேப்பூர் போலீஸார் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனிடேயே கடலூர் மாவட்ட மோட்டார் வாகன உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கிரகோரி என்பவர், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை முதல் தொழுதூர் இடையே ஆவட்டி, வேப்பூர், ஆசனூர், பாலி, புல்லூர் ஆகிய பகுதிகளில் மேம்பாலப் பணிகளும், சாலை விரிவாக்கப் பணிகளும் நடைபெற்று வரும் சூழலில், வாகன ஓட்டிகளுக்கு அசௌகரியான சூழல் உள்ளதால், உளுந்தூர்பேட்டை மற்றும் தொழுதூர் சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே இப்பிரச்சினை தொடர்பாக வழக்குத் தொடுத்துள்ள கதிர்வேலிடம் கேட்டபோது, “தென்மாவட்டங்களை இணைக் கும் முக்கியப் போக்குவரத்துப் பகுதியான வேப்பூரில் ஏற்கெனவே கூட்டுரோடில் ஒரு பாலம் உள்ளது.
வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே ஒரு பாலம் உள்ளது. 1.5 கி.மீட்டர் இடைவெளியில் இரு பாலங்கள் உள்ள போது, அதற்கு இடையே இன்னொரு பாலம் அமைத்தால் கனரக வாகனங்கள் எப்படிச் செல்லும்? விபத்து தான் ஏற்படும். எனவே தான் பாலத்தை சமமாக அமைக்க வலியறுத்தினேன். அவர்கள் ஏற்க மறுத்ததால் வழக்குத் தொடுத்துள்ளேன்” என்றார்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை திருச்சி கோட்ட திட்ட இயக்குநர் கணேஷ்குமாரிடம் கேட்டபோது, “அவர் கூறுவது போல் அமைக்க இயலாது. போக்குவரத்து துறை, கோட்டாட்சியர் மற்றும் பொறியாளர்கள் ஆய்வு செய்த அறிக்கைப் பெற்றே முறையாக பாலப் பணிகள் தொடங்கினோம். வழக்கு விசாரணைக்கு வரும் போது, அதுகுறித்த தகவல்களை முன்வைப்போம்” என்றார்.
மேலும் சுங்கக் கட்டணத்திற்கும் தற்போது நடைபெறும் பணிகளுக்கும் தொடர்பு கிடையாது, தற்போது நடைபெறுவது மேம்பாட்டு பணிகள். எனவே அதோடு அவற்றை இணைத்து பேசுவது சரியல்ல என்றும் திட்ட இயக்குநர் தெரிவித்தார்.