

புதுச்சேரி: புதுவை உருளையன்பேட்டை தொகுதி கோவிந்தசாலை, பிரியதர்ஷினி நகர், கண்டாக்டர் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதிகளில் குடிசை வீடுகளில்வாழும் மக்களுக்கு, கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரைஉள்ள கால கட்டத்தில் 10 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட 384 வீடுகள் குடிசைமாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டன.கடந்த 2011-ம் ஆண்டு அந்த குடியிருப்பு அனைத்தும் அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த நிலையில் விடுபட்ட பயனாளிகள் தங்களுக்கும் வீடுகள் கட்டி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அந்த பகுதிகளில் புதிதாக குடியிருப்பு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 32 குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு நகர மற்றும் கிராம திட்டமிடல் துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
பின்னர் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ.1 கோடியே 54 லட்சத்துக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு பணி ஆணை வழங்கப் பட்டது.
இதனையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டனர். ஆனால் 2 ஆண்டு களுக்கு பிறகு கடந்த 2015-ம் ஆண்டு 32 வீடுகளை கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு பணி முழுமையாக முடிக்கப் பட்டது.
எனினும் பயனாளிகள் அதிகளவில் இருப்பதால் வீடுகளை யாருக்கு கொடுப்பது என்பதிலும், பயனாளிகள் தேர்வு செய்வதிலும் சிக்கல் நிலவியது. ஆகையால் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகள் கடந்த நிலையிலும் பயனாளிகளுக்கு கொடுக்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கோடியில் கட்டப்பட்டும், மக்கள் பயன்பாடின்றி இருக்கும் இக்குடியிருப்பில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தும், குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்தும் காணப்படுகிறது.
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், "மக்களுக்கு தராமல் பயன்பாடு இல்லாத இவ்விடத்தில் குப்பைகளை கொட்டி வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவுநீர் தேங்கி நிற்பதால் அதன் அருகில் வசிக்கும் மக்களுக்கு கொசுக்களால் பரவும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
அந்த பகுதிகளில் உரிய பாதுகாப்பு எதுவும் இல்லாததால் இரவு நேரங்களில் சிலர் வீடுகளில் ஜன்னல் கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை திருடி செல்கின்றனர். இதே போல் அங்குள்ள வீட்டு சுவர்களில் செடிகள் வளரத் தொடங்கியுள்ளது.
இதன் வேர்கள் சுவர்களில் ஆழமாக வேரூன்றி இருப்பதால் அடுக்குமாடி குடியிருப்பு சுவர்கள் சேதம் அடைந்து வருகிறது. இதனை யாரும் பராமரிப்பது இல்லை. இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்து மது குடிக்கின்றனர்.
சில சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். 32 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உரிய பயனாளிகளுக்கு கொடுக்கப்படாமல் இருப்பதால் அரசின் பணம்தான் வீணாகிறது. உரிய பயனாளிகளை விரைந்து தேர்வு செய்யுங்கள். விரைவில் தருவதாகக்கூறி காலம் தாழ்த்தாதீர்கள்" என்றனர்.
இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரி களிடம் கேட்டதற்கு, "கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப் பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனால் பயனாளிகளுக்கு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது மீண்டும் அப்பயனாளிகளுக்கு தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த குடியிருப்பில் மின்சாரம், குடிநீர் இணைப்பு உள்ளிட்டவைகள் தரப்பட்டு பயனாளிகளுக்கு ஓரிரு மாதங்களில் வீடுகள் வழங்கப்படும்" என்றனர்.