

தூத்துக்குடி: சாத்தான்குளம் பகுதியில் முருங்கை விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது. விவசாயிகள் வங்கிக்கடன் பெற்று சொட்டுநீர் பாசனம் மூலம் முருங்கை சாகுபடி செய்துள்ளனர். தற்போது பூ பூத்து காய்கள் காய்க்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சாத்தான்குளம் பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் சுப்பராயபுரம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முருங்கை மரங்களும், பன்னம்பாறை பகுதியில் தென்னை மற்றும் வாழைகளும் சேதமடைந்தன.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். சேதமடைந்த முருங்கை மற்றும் தென்னை, வாழைகளை சாத்தான்குளம் வட்டாட்சியர் ரதிகலா பார்வையிட்டார். அப்போது, உரிய கணக்கெடுப்பு நடத்தி ஆட்சியரிடம் தெரிவித்து நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அவர் உறுதியளித்தார். கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துராமலிங்கம், சுந்தரபாண்டி மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.