Published : 30 Sep 2017 05:57 PM
Last Updated : 30 Sep 2017 05:57 PM

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலி: ஒரே வாரத்தில் 3 குழந்தைகள் டெங்குவால் உயிரிழப்பு

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ஒரே வாரத்தில் 3 குழந்தைகள் பலியாகியுள்ளனர். இதில் இருவர் அம்பத்தூரைச் சேர்ந்தவர்கள்.

சென்னை அம்பத்தூர் கல்யாணபுரம் முதல் தெருவில் வசிப்பவர் சாம்ராஜ்(30). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி ஷீபா(26). இவர்களது ஒரே மகள் ஜாய் பெனிட்டா(3.5). கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பெனித்தாவுக்கு காய்ச்சல் வந்துள்ளது. அருகில் உள்ள மருத்துவர்களிடம் காண்பித்தும் சரியாகாததால் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து வந்து காட்டியுள்ளனர்.

ஆனால் அங்கு உரிய பரிசோதனை செய்யாமல் மாத்திரை மருந்து கொடுத்து விட்டு அனுப்பியுள்ளனர். வீட்டுக்கு அழைத்துவரப்பட்ட குழந்தை பெனித்தாவுக்கு நான்கு நாளில் மீண்டும் காய்ச்சல் அதிகரித்துள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாய் பெனிட்டா உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை ஜாய் பெனிட்டா இன்று காலை 7 மணி அளவில் உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் காரணமாக அதிக அளவில் குழந்தைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு நெல்லூரைச் சேர்ந்த சஞ்சனா(5)இன்று காலை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதே போல் அம்பத்தூர் புதூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகள் திவ்யபாரதி(6) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்னர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார்.

கடந்த இரண்டு நாட்களில் சென்னையில் மூன்று குழந்தைகள் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பரவும் டெங்கு காய்ச்சல் குறித்த பொதுமக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் மாநகராட்சி சுகாதாரத்துறை செயலபாடின்மையே இது போன்ற காய்ச்சல் அதிகரிப்பதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து கருத்தை அறிய மாநகராட்சி மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில் நாதனை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால், தொடர்புகொள்ள முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x