

மதுரை: கடந்த மூன்று ஆண்டில் மதுரை மாநகராட்சியில் மூன்று மாநகராட்சி ஆணையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது உள்ள மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக உள்ள பிரவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு 2021ம் ஆண்டு ஜூனில் மதுரை மாநகராட்சி ஆணையாளராக இருந்த விசாகன் திண்டுக்கல் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இவர் மாநகராட்சி நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்களை மேற்கொண்டு கறாராக இருந்து வந்தார். 100 வார்டுகளில் நீண்ட காலமாக ஒரே பணியிடத்தில் செல்வாக்குடன் இருந்த மாநகராட்சி அதிகாரிகளை இடமாற்றம் செய்து நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார்.
ஆனால், அந்த மாற்றம் பலன் தருவதற்கு முன்பே பொறுப்பேற்ற ஒரு ஆண்டு கூட முடியாத நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் திடீரென்று சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் விருப்பப்பட்டே இடமாறுதல் வாங்கி சென்றதாக கூறப்பட்டது. கார்த்திகேயன் தற்போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக அவர் உள்ளார்.
இந்நிலையில் கார்த்திகேயனுக்கு பதிலாக நியமிக்கப்பட்ட சிம்ரன் ஜீத் சிங் மதுரை மாநகராட்சி ஆணையாளராக கடந்த ஒரு ஆண்டாக சிறப்பாக செயல்பட்டு வந்தார். நிதி நெருக்கடியில் தத்தளிதத்த மாநகராட்சியின் வருவாயை பெருக்கி நிலுவையில் உள்ள வரியை வசூல் செய்து நிதி இருப்பு வைத்திருக்கும் மாநகராட்சியாக மதுரை மாநகராட்சியை வெற்றிகரமாக மாற்றி காட்டினார். ஆனாலும், மண்டல அளவில் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் மாநகராட்சியின் முக்கிய அடிப்படை தேவையான சாலை வசதிகளை செய்து கொடுக்க முடியவில்லை.
மாநகராட்சி 100 வார்டுகளிலும் திரும்பிய பக்கமெல்லாம் சாலைகள் குண்டும், குழியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மழைக்காலத்தில் சாலைகள் சேறும், சகதியுமாக இருப்பதால் மக்கள் தவித்து வருகின்றனர். அதிகாரிகள், கான்டிராக்டர்கள் அலட்சியத்தால் ஆணையாளர் சிம்ரஜ் ஜீத் சிங்கால், பாதாள சாக்கடைப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகளை கூட புதிதாக போட்டு கொடுக்க முடியவில்லை.
இதற்கிடையில் மதுரையை சேர்ந்த அமைச்சர்கள், மாநகர திமுக நிர்வாகிகளின் அரசியல், மாநகராட்சி நிர்வாகத்தில் திமுக கவுன்சிலர்களுக்கும், மேயருக்கும் இடையே உள்ள மோதல் போன்றவற்றால் சிம்ரன் ஜீத் சிங் கடந்த சில மாதமாகவே கடும் நெருக்கடிக்கு ஆளானார். அதனால், தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளராக நீடிக்க அவரும் விருப்பமில்லாமல் இருந்து வந்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில் சிம்ரன் ஜீத் சிங், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய செயல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக பிரவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக உள்ளார். இவர் மாநகராட்சியின் நிலைமைகளை புரிந்துகொண்டும், மதுரை திமுகவினரின் அரசியலை தாண்டியும் மாநகராட்சி நிர்வாகப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.