Published : 06 Jun 2023 07:37 PM
Last Updated : 06 Jun 2023 07:37 PM

“அவர் அவ்வாறு சொல்லிக்கொண்டு இருப்பதே நமக்கு எழுச்சி” - ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

சென்னையில் நடந்த நிகழ்வில் உரையாற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: "திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொள்ளாத நிலையிலே அவருடைய கருத்துகளையெல்லாம் விமர்சனங்களாக்கி, தொடர்ந்து தினந்தோறும் ஏதாவது ஒரு செய்தியை மக்களைக் குழப்பக்கூடிய வகையிலே அவர் சொல்லிக்கொண்டிருக்கிறார்" என்று ஆளுநர் ஆர்.என்.ரவியைக் குறிப்பிடாமல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கூறியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில், 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் முதல்வர் பேசியது: "கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டையும் இரண்டு கண்களாக நாம் போற்றி பாராட்டிக் கொண்டிருக்கிறோம். அதை செயல்படுத்திக் கொண்டும் இருக்கிறோம். கல்வியில் சிறந்த தமிழ்நாடாகவும், மக்கள் நலம் பேணுவதில் மிக சிறந்த தமிழ்நாடாகவும் நம்முடைய மாநிலம் இன்றைக்கு தலைநிமிர்ந்து நிற்கிறது. ஆனால், இப்படி தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய இந்த மாநிலத்தின் வளர்ச்சி, மாநிலத்திலே மிகப் பெரிய பொறுப்பிலே இருக்கக் கூடிய ஒருவருக்கு மட்டும் அது புலப்படவில்லை.

அவர், திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொள்ளாத நிலையிலே அவருடைய கருத்துகளையெல்லாம் விமர்சனங்களாக்கி, தொடர்ந்து தினந்தோறும் ஏதாவது ஒரு செய்தியை மக்களைக் குழப்பக்கூடிய வகையிலே அவர் சொல்லிக்கொண்டிருக்கிறார். அதுபற்றி எல்லாம் மக்கள் கொஞ்சம்கூட கவலைப்படமாட்டார்கள். அதை எல்லாம் மக்கள் தெளிவாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அவர் அவ்வாறு தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு ஒரு எழுச்சி ஏற்படும். மக்களுக்கு ரொம்ப தெளிவாக புரிந்துகொள்வார்கள்.

நம்மை ஆளாக்கிய தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஜூன் 3-ம் தேதியிலிருந்து நாம் கொண்டாட தொடங்கியிருக்கிறோம். அரசின் சார்பில் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்காக திட்டமிடப்பட்டது. 5 முறை முதல்வராக இருந்த அவர் எண்ணற்ற திட்டங்களை செய்துகாட்டியவர். எனவே அவருடைய பாதையில்தான் நம்முடைய அரசின் திட்டங்களும் இன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய அளவில் சுகாதார குறியீடுகளில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு இருக்கிறது. இதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். யார் அவர் என்பது உங்களுக்குத் தெரியும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைப் பாராட்டி, உலக சுகாதார அமைப்பே அதன் வலைதளத்தில் ஓர் அருமையான கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அதை அவர் படித்துப் பார்க்க வேண்டும். உலக அமைப்பே பாராட்டுகிற வகையில், நாம் அந்த திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அண்மையில், நான் ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்றேன். அதைக்கூட இங்கிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எவ்வாறு விமர்சித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். முதலீட்டை ஈர்க்க செல்லவில்லை, முதலீடு செய்யப்போவதாக கூறினார். அது அவர்களுடைய புத்தி, அந்த எண்ணம்தான் அவர்களுக்கு வரும்" என்று முதல்வர் பேசினார். | வாசிக்க > பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிதான் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகிறாரா? - தங்கம் தென்னரசு பதிலடி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x