Published : 06 Jun 2023 06:57 PM
Last Updated : 06 Jun 2023 06:57 PM
சென்னை: "தமிழக முதல்வர் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, ரூபாய் 3 ஆயிரத்து 233 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து திரும்பியுள்ள நிலையில், ஆளுநர் கூறிய கருத்து முதல்வரின் அரசு முறை பயணத்தை சிறுமைப்படுத்தும் வன்மம் கொண்டதாகும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் காட்டமாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உதகமண்டலம் ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 5) பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. இம்மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை கருத்தில் கொண்டு, மாறிவரும் சூழலுக்கு தக்கபடி பாடத்திட்டங்கள் அமைய வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
தமிழக அரசு மாநிலத்துக்கான தனித்துவம் வாய்ந்த கல்விக் கொள்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது அதற்கு இடையூறு செய்து, குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவது ஏற்கதக்கதல்ல. அத்துடன், “நாம் வேண்டுகோள் விடுப்பதாலோ அல்லது அவர்களது நாடுகளுக்கு சென்று பேசுவதாலோ மட்டும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள்” என்று பேசியுள்ளார்.
அண்மையில் தமிழக முதல்வர் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, தமிழகத்தில் நடத்தப்படும் சர்வதேச முதலீட்டார்கள் மாநாட்டிற்கு நேரில் அழைத்ததுடன், அங்கு ரூபாய் 3 ஆயிரத்து 233 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து திரும்பியுள்ள நிலையில் ஆளுநர் கூறிய கருத்து முதல்வரின் அரசு முறை பயணத்தை சிறுமைப்படுத்தும் வன்மம் கொண்டதாகும்.
மாநில அரசின் அரசு கட்டமைப்பை வழிநடத்தும் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம்தான் இருக்கிறது. ஆளுநர்களிடம் இல்லை என உச்ச நீதிமன்றம் தெளிவாக வரையறுத்து உத்தரவிட்ட பிறகும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை அதிகார அத்துமீறலாக தொடர்வதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT