Published : 14 Oct 2017 07:27 PM
Last Updated : 14 Oct 2017 07:27 PM

டெங்கு காய்ச்சலை அரசு சவாலாக எடுத்து கட்டுப்படுத்தி வருகிறது: முதல்வர் பழனிசாமி

டெங்கு காய்ச்சலை அரசு சவாலாக எடுத்து கட்டுப்படுத்தி வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

''நாட்டில் சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தூய்மையான கிராம இயக்கம் என்ற ஒரு மகத்தான திட்டத்தை துவக்கி வைத்தார். அவரின் நோக்கம் வெற்றியடைய வேண்டுமானால் நாம் நம்முடைய கிராமத்தையும், நகரத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்று நாம் டெங்கு காய்ச்சலின் தாக்கத்தை அனைத்து துறையினரின் கடும் உழைப்போடு முறியடித்து கொண்டு வருகிறோம். டெங்கு காய்ச்சல் பரவாமலிருக்க அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் முனைப்புடன் அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிறார்கள்.

டெங்கு காய்ச்சலை அரசு சவாலாக எடுத்து கட்டுப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் அனைத்து துறை அலுவலர்களும் கூட்டாக ஆய்வுகள் செய்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இது மட்டுமின்றி கூடுதல் படுக்கை வசதிகள், உபகரணங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அரசு எடுக்கும் இந்த முயற்சியும் உழைப்பும் மட்டும் போதுமானதா? என்றால் அது போதாது என்றுதான் நான் கூறுவேன். பொதுமக்களாகிய உங்களுடைய ஒத்துழைப்புதான் டெங்குவை ஒழிக்க கூடுதல் பலத்தை அளிக்கும். அப்போதுதான் டெங்கு காய்ச்சலை வேகமாக ஒழிக்க முடியும்.

சுகாதாரத்திலும், கொசு ஒழிப்பிலும் பாமர மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ளுவது என்று தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு விளக்கி சொல்ல வேண்டும். தேவைப்பட்டால் இளைஞர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், அரசு மருத்துவக் குழுவினருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் டெங்கு கொசுவை முற்றிலும் ஒழித்துவிட முடியும்.

எல்லாவற்றையும் அரசியலாக்கி ஆதாயம் தேடுபவர்கள், டெங்கு காய்ச்சலையும் அரசியல் ஆக்குவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மக்கள் சேவை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ள நாங்கள் அவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்காமல் விரைந்து செயல்பட்டு வருகின்றோம்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிலர் தேடி தேடி குற்றச்சாட்டுகளை கண்டுபிடித்து கூறுகிறார்கள். மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை தீர்க்கும் கடமையும், பொறுப்பும் எதிர்க் கட்சிகளுக்கும் உண்டு என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். அந்தப் பிரச்சினைகளிலிருந்து மக்களை விடுவிக்க ஆட்சியாளர்களுக்கு கருத்துக்களைக் கூறலாம். அதை விட்டுவிட்டு, அவதூறுகளையும், வதந்திகளையும் அள்ளிவீசி மக்களை குழப்பத்திலும், பீதியிலும் ஆழ்த்துகிற செயல்களை செய்து கொண்டிருப்பது மிகவும் தவறான செயலாகும். அப்படிப்பட்டவர்களை, மக்கள் புரிந்து கொள்வார்கள்

எதிர்க்கட்சித் தலைவர் அடிக்கடி இப்பொழுது விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார். இன்றைக்கு ஸ்டாலின் இந்த ஆட்சியைப் பற்றி ஒரு கருத்தைச் சொன்னார். இந்த ஆட்சி டெங்கு ஆட்சி என்று சொன்னார். வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த ஆட்சியை களங்கப்படுத்துவதற்காக இப்படிப்பட்ட கருத்தைச் சொல்கிறார் என்று கருதுகிறேன். இந்த அரசைப் பொறுத்தவரைக்கும், இன்றைக்கு மக்கள் பணி செய்வதிலே முனைப்போடு செயலாற்றிக் கொண்டிருக்கின்றது'' என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x