2 ஆண்டுகளாக முடங்கிய தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம்: நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்

பழங்குடியினர் இயக்குநர் அலுவலகம், சென்னை.
பழங்குடியினர் இயக்குநர் அலுவலகம், சென்னை.
Updated on
2 min read

மதுரை: 2 ஆண்டுகளாக தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் முடங்கியுள்ள நிலையில், பழங்குடியினர் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் பழங்குடியினர் நலத்துறைக்கென்று பிரத்யேகமாக தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை மற்றும் இயக்குநரகம் உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பழங்குடியினர் மக்களின் நலனுக்காக செயல்பட்டுவந்த ஆன்றோர் மன்றத்தின் செயல்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டு கடந்த 2018-ம் அதே ஆண்டு புதிய அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் அமைச்சர் தலைவராக கொண்டு அவரின் கீழ் செயலர், இயக்குநர், சட்டமன்ற உறுப்பினர்கள், பழங்குடியினர் அலுவல்சாரா உறுப்பினர்கள், பழங்குடியினர் அல்லாத அலுவல்சாரா உறுப்பினர்கள் என்று மொத்தம் 20 பேர் கொண்ட நிபுணர்கள் குழு கடந்த 2018 பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டனர்.

கடந்த 01.02.2021 அன்று ஆன்றோர் மன்றத்தின் பதவி காலம் முடிவுற்றது. அதன் பிறகு இந்த மன்றத்தின் செயல்பாடுகள் முடங்கிப்போய் உள்ளதால் பழங்குடியினர் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் கடந்து (27 மாதங்கள்) நிலையில் இன்றுவரை ஆன்றோர் மன்றத்திற்கான கூட்டங்கள் நடைபெறவில்லை என்பதை தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குநரகத்தின் பொது தகவல் அலுவலர் அவர்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் வழங்கியுள்ளார்.

சமூக ஆர்வலர் கார்த்திக்
சமூக ஆர்வலர் கார்த்திக்

இதுகுறித்து ஆர்டிஐ மூலம் தகவல்களை பெற்ற சமூக ஆர்வலர் கார்த்திக் கூறுகையில், ''ஆன்றோர் மன்றம் என்பது பழங்குடியின மக்கள் குறைகளான வீட்டு மனைப்பட்டா, தாட்கோ கடன், குடிதண்ணீர் வசதி, மின்சார வசதி, சாலை வழி அமைத்தல், கல்வி நிலையங்கள் மருத்துவமனை அமைத்தல் போன்ற இன்றியமையாத தேவைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய அரசுக்கு ஆலோசனைகள் வழங்குவதே ஆன்றோர் மன்ற உறுப்பினர்களின் முக்கிய பணிகளாகும். இவ்வாறு முக்கியத்துவம் பெற்ற இந்த மன்றம் செயல்படாமல் இருப்பதால் பல்வேறு வளர்ச்சி நலத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது.

சான்றாக தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத் துறை (Tamilnadu government Tribal Welfare department) கடந்த 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.265 கோடி நிதியை பயன்படுத்தாமல் அரசு கஜானாவிற்கே திருப்பி ஒப்படைப்பு செய்யப்பட்டு வனத் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பிற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்ற உண்மை தகவல்களும் தகவல் அறியும் சட்டம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அரசு விதிகளின்படி தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் முழு அளவில் உடனடியாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பழங்குடியினர் நலத்துறைக்கென்று பிரத்யேக தனி அமைச்சகம் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in