Published : 06 Jun 2023 05:00 PM
Last Updated : 06 Jun 2023 05:00 PM

பெரும்பாக்கத்தில் கட்டி முடித்து 6 மாதங்களாச்சு: பொது கழிப்பறையை எப்ப சார் திறப்பீங்க?

சென்னை புறநகரில் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளி்ல் ஒன்று பெரும்பாக்கம். சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, மேடவாக்கம் இடையே அமைந்துள்ள பெரும்பாக்கத்தில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளன. மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் செம்மொழி சாலையில் பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகம் உள்ளது. இதன் எதிரே உள்ள மேட்டுத் தெருவில், பெரும்பாக்கம் ஊராட்சிக்கு சொந்தமான சமூக நலக் கூடம், நியாயவிலை கடை, அங்கன்வாடி மையம், வேளாண்துறை அலுவலகம் ஆகியவை அடங்கிய வளாகம் உள்ளது.

இந்த வளாகத்தை சுற்றி ஏராளமான கடைகள், குடியிருப்புகள் உள்ளன. இதன் வடக்கு பக்கம் கோயில், ஆட்டோ நிறுத்தும் இடமும், இதை ஒட்டிய செம்மொழி சாலையில் பேருந்து நிறுத்தமும் அமைந்துள்ளன. காய்கறி கடைகள், சிறு உணவகங்களில் பணியாற்றுவோர், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் இயற்கை உபாதையை கழிப்பதற்கு வசதியாக, கடந்த 2011-12ல் ஒருங்கிணைந்த குழந்தைகள், மகளிர் சுகாதார வளாகமும், அதன் பின் பகுதியில் ஆண்கள் கழிப்பறையும் கட்டப்பட்டது.

அது தற்போது செயல்பாட்டில் இல்லை. செல்லும் வழி முழுவதும் கழிவுகள், முட்செடிகள் உள்ளன. இந்த நிலையில், தற்போது, சமூகநலக் கூடம் அருகே ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பெரும்பாக்கம் பகுதி சமூக சுகாதாரகழிப்பறை வளாகம் ரூ.5.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகம் கட்டி 6 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவும் திறக்கப்படவில்லை என்பதே அப்பகுதி மக்களின் ஆதங்கம்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’யின் ‘உங்கள் குரல்’ பிரத்யேக சேவை எண்ணை தொடர்பு கொண்டு வாசகர் என்.கே.ராஜா கூறியதாவது: பெரும்பாக்கம் மேட்டுத்தெரு பகுதியில் பொது கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும் என்று நேசமணி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் செங்கல்பட்டு ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது. ஆனால், இதுவரை திறக்கப்படவில்லை.

பெரும்பாக்கம் ஊராட்சியிலும் இதுதொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த கழிப்பறை வளாகம் திறக்கப்பட்டால் இங்குள்ள கடைகளின் ஊழியர்கள், வளாகத்தில் உள்ள நியாயவிலை கடை பணியாளர்கள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பலரும் பயன்பெறுவார்கள்.

எனவே, இதை உடனே திறக்க வேண்டும்’’ என்றார். இதுகுறித்து பெரும்பாக்கம் ஊராட்சி செயலர் நாராயணனிடம் கேட்டபோது, ‘‘கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சுகாதார திட்ட வளாகம் கட்டப்பட்டது. இப்பகுதி யில் அனைவரது வீடுகளிலும் கழிவறை கட்டப்பட்டுள்ளதால், அந்த வளாகம் பயன்பாடின்றி உள்ளது.

எனவே, பயன்படுத்தும் வகையில் இந்த வளாகத்தை மாற்றியமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். அதேபோல, புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை வளாகத்துக்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து 5 மாதங்கள் ஆகிறது. மின்மீட்டர் தட்டுப்பாட்டால் வருவதற்கு தாமதமாகிறது. தவிர, கழிப்பறை வளாகத்துக்கும், அருகில் உள்ள கழிவுநீர் தொட்டிக்கும் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. எஞ்சியுள்ள பணிகளை முடித்து கழிப்பறை வளாகம் விரைவில் திறக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x