Published : 28 Sep 2017 12:32 PM
Last Updated : 28 Sep 2017 12:32 PM

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே டெங்கு பரவ காரணம்: ஸ்டாலின் தாக்கு

தமிழகத்தில் 7,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததே டெங்கு பரவுவதற்கு காரணம். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் சுகாதாரப் பணிகள் முறையாக நடந்திருக்கும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஸ்டாலின் இன்று (செப். 28) நேரில் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "தமிழகத்தில் டெங்கு வேகமாக பரவி வருகிறது. ஆனால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தவறான தகவல்களை தந்து கொண்டிருக்கிறார்.

இதுவரை,  தமிழகத்தில் 7000 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 25 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. படுக்கை வசதிகளும் செய்து தரப்படவில்லை. மருத்துவமனையில் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதுமான வசதி இல்லை.

ஆனால், குதிரை பேர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி அரசு இதனை கண்டு கொள்ளவில்லை. அமைச்சர்களோ எந்தத் துறையில் எப்படி லஞ்சம் வாங்கலாம் என பார்த்துக் கொண்டுள்ளனர்.

உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததே டெங்கு பரவுவதற்கு காரணம். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் சுகாதாரப் பணிகள் முறையாக நடந்திருக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x