

சென்னை: கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாக்குழுவின் ஆலோசனைக்கூட்டத்தில் 34 வகையான நிகழ்ச்சிகள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, நூற்றாண்டு விழாவை மாநிலம் முழுவதும் நடத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கும் வகையில், நூற்றாண்டு விழாக் குழுவின் கலந்துரையாடல் கூட்டம் நேற்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் அவரது தலைமையில் நடைபெற்றது.
இதில் ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா, தயாநிதிமாறன், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், கருணாநிதி யின் நூற்றாண்டு விழாவானது, மாணவர்கள் மத்தியில் விநாடி-வினா போட்டிகளை மாவட்டம், மாண்டலம், மாநில அளவில் நடத்துவது, கவியரங்கம், கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்துவது, கருணாநிதி சார்ந்த கலை நிகழ்ச்சிகளை உள்ளடக்கி கலை இரவுகள்நடத்துவது, கலைஞர் சுடர் ஏந்திகலைஞர் கோட்டம் வரை தொடர்ஓட்டம், மாவட்ட வாரியாக மாரத்தான் தொடர் ஓட்டங்கள், மாவட்டவாரியாக விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
மேலும் கருணாநிதி எழுதிய திரைப்பட வசனங்களை ஒப்புவித்தல், கருணாநிதி குறித்த நிகழ்வுகள்,தகவல்களை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் தயாரித்து ஆண்டு முழுவதும் வெளியிடுவது, தொழிற்சங்கம் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதுதவிர, சட்டத்துறை சார்பில் மாநில சுயாட்சி, அரசியல் சட்ட மாண்புகளை காப்போம் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டிகள் நடத்துவது, மகளிர் அணி சார்பில்‘போட்காஸ்ட்’, திமுக சொற்பொழிவாளர்களை கொண்டு கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் நடத்துவது, கலைநிகழ்ச்சிகள், ஆய்வரங்கங்கள், ஆங்கிலகருத்தரங்கங்கள், பொதுக்கூட்டங்கள், மகளிர் அணி சார்பில் மாவட்டம் தோறும் கருத்தரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள், தேதி சொல்லும் சேதி வரலாற்று குறிப்புகள் அடங்கிய நூல் வெளியீடு உள்ளிட்ட 34 வகையான நிகழ்ச்சிகளை மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.