

சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில் தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்ததால், 16 வயது பள்ளி மாணவி ஒருவர், தந்தையின் குடிப் பழக்கத்தால்வேதனையடைந்து, தற்கொலை செய்துள்ளார். ஆனால், திமுக அரசுஇதைப் பற்றிக் கவலைகொள்ளவில்லை. மது ஆலைகள் நடத்தும் தங்கள் கட்சிக்காரர்களும், அமைச்சரும் சம்பாதிக்க, ஏழை மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைஅடுத்த காமநாயக்கன்பாளையத் தில் கணேசன் என்ற விவசாயி, மதுவில் நஞ்சு கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மதுக் கடைகளாலும், அதை நிர்வகிக்கும் அமைச்சராலும் தமிழகஅரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். தமிழகத்தில் ஓராண்டுக்குள் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் செயல்படுத்த வசதியாக, மதுவிலக்குத் துறை அமைச்சரை உடனடியாக பதவி நீக்கவேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: வேலூர் சின்னராஜாகுப்பம் பகுதியைச் சேர்ந்த சிறுமி விஷ்ணுபிரியா, தந்தையின் குடிப் பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சட்டவிரோத மது விற்பனையால் மோதல்களும், கொலைகளும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. எனவே, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: சிறுமி விஷ்ணுபிரியா, தனது தந்தையின் குடிப் பழக்கத்தால் மனம் வெறுத்து தற்கொலை செய்துகொண்டதுஅதிர்ச்சி அளிக்கிறது. அவரது பெற்றோருக்கு ஆறுதல்கள். விஷ்ணுபிரியாவின் தந்தை இனியாவது குடிப்பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன்: சிறுமி விஷ்ணுபிரியாவின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மது அருந்துவோரால், அவரைச் சார்ந்தவர்களின் வாழ்வும் பாதிக்கப்படும் என்பது, சிறுமியின் உயிரிழப்பால் மீண்டும் நிரூபணமாகியுள் ளது. எனவே, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததுபோல, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.