

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் நிலப்பரப்பில் 5-வது சிப்காட் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறு, குறு விவசாயிகள் உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, விவசாயிகளிடம் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என தெரிவித்தனர். ஆனால், விவசாயிகள் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வலியுறுத்தினர். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், போராட்டத்தின் 152-வது நாளான நேற்று, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர். மேலும், இதில், விவசாயிகளின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
இதையொட்டி, டிஎஸ்பி முரளி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், உண்ணாவிரதப் பந்தல் அருகே 2 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனிடையே, விவசாயி ஒருவர் உண்ணாவிரதப் பந்தலுக்குக் குடிநீர் கேனை எடுத்துச் சென்றார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், விவசாயி மண்ணெண்ணைய்யை எடுத்துச் செல்வதாக நினைத்து அவரிடமிருந்து கேனை பறித்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள், “தண்ணீர் குடிக்கக்கூட அனுமதிக்க மாட்டீர்களா” என கேள்வி எழுப்பினர். மேலும், போலீஸாரை கண்டித்து உத்தனப்பள்ளி-ஓசூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் மற்றும் வட்டாட்சியர்கள் பன்னீர் செல்வி (சூளகிரி), கிருஷ்ணமூர்த்தி (சிப்காட்) ஆகியோர் சமாதானம் செய்தனர். இதையடுத்து, 10 நிமிடம் நடந்த சாலை மறியலை கைவிட்டு, உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
விவசாயிகளிடம் வருவாய் மற்றும் காவல்துறையினர் பேச்சு நடத்தினர். ஆனால், “தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் தொடரும்” என விவசாயிகள் தெரிவித்தனர்.