

மதுரை: வலசைப் பாதைகள் ஆக்கிரமிப்புச் செய்யப்படுவதால் யானைகள் ஊருக்குள் நுழைகின்றன என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் கோபால், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மே 27-ல் அரிசிக் கொம்பன் யானை புகுந்து விளை நிலங்களையும், பொதுச் சொத்துகளுக்கும் சேதம் விளைவித்தது. அரிசிக் கொம்பன் யானையைப் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயப் பகுதியில் விடவும், யானையைத் தொடர்ந்து கண்காணிக்கவும் கேரள உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இதனால் அந்த மாநிலத்தில் அரிசிக் கொம்பனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில் அரிசிக் கொம்பன் தமிழகத்துக்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. அரிசிக் கொம்பன் யானையால் கம்பம் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கவும், பாதிப்புகளுக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் உரிய இழப்பீடு வழங்கவும்,அரிசிக் கொம்பன் மீண்டும் தமிழகத்தில் சேதம் ஏற்படுத்தாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், யானைகளின் வலசைப் பாதைகள் ஆக்கிரமிப்புச் செய்யப்படுவதால் அவை ஊருக்குள் நுழைகின்றன என்றனர்.
சேதம் கணக்கெடுப்பு: அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், அரிசிக் கொம்பன் யானையால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதம் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அரிசிக் கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுவிட்டது. அந்த யானை அடர்வனப் பகுதியான களக்காடு, முண்டன்துறை புலிகள் சரணாலயப் பகுதியில் விடப்படவுள்ளது என்றார். இதைப் பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.